புனர்வாழ்வின் போதும் கொலைகளா?


யுத்தத்தின் போது, சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன .  
சரணடைந்தோர் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவிப்புக்கும், தகவலறியும் சட்டத்தின் ஊடாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் தகவலுக்கு அமையவும் 2,994 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில், எங்குமே கணக்கில்லை.  
இராணுவத்திடம் 13 ஆயிரத்து 784 பேர் சரணடைந்ததாகவும், அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், கொழும்பு ஷங்கரிலா ஹோட்டலில், நேற்றுமுன்தினம் (15) இடம்பெற்ற, ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டாபய தெரிவித்திருந்தார்.  
 தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்துக்கு, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயகவால் ​கையெழுத்திட்டு அனுப்பப்பட்டிருக்கும் பதில் கடிதத்தில், “முன்னாள் போராளிகள் 10,790 பேர் புனர்வாழ்வுக்காக, 19ஆம் திகதி மே மாதம் 2009ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் சரணடைந்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  
இந்நிலையில், புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடைய வில்லையென இராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பான தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்துக்கு  
“இராணுவத்திடம் புலிகள் சரணடையவில்லை எனவும், அவர்கள் அரசாங்கத்திடமே சரணடைந்தார்கள்” என பதில் வழங்கியிருந்தது. 
இது, தொடர்பான தகவல்களைப் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராணுவம் பதில் வழங்கியிருந்தது. 
இதன்படி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகம் வழங்கியிருந்த தகவல்களின்படி ​இறுதி யுத்தக் காலப்பகுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி ஒரு நேரத்தில் வெறும் 10 ஆயிரத்து 790 பேரே சரணடைந்தனரெனத் தெரிவித்துள்ளது. 
இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிடும் தொகைக்கும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகம் குறிப்பிட்டுள்ள தொகைக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.   

No comments