மணமகன் விளம்பரம் போட்டு 5 இலட்சம் அபேஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கையடக்க தொலைபேசி ஊடாக மோசடி கும்பல் ஒன்று பலரிடம் பணத்தை சூறையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த மோசடி கும்பலிடம் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு மட்டக்களப்பு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் வெளிநாட்டில் இருந்து பொதி வந்திருப்பதாகவும் மணமகள் தேவை போன்றவாறு தெரிவித்தே இவ்வாறு பண மோசடி  மேற்கொள்ளப்படுகிறது.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும் மணமகள் தேவை, மணமகளை உடன் வெளிநாட்டிற்கு கூட்டி செல்வதாக மோசடி கும்பல் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அந்த விளம்பரத்துடன் தொடர்புகொண்டு தமது மகளின் திருமணம் தொடர்பாக உரையாடிய பெற்றோரிடம், மணமகளை பிடித்துள்ளதாக தெரிவித்து அவரை வெளிநாட்டுக்கு கூட்டிச் செல்வதற்கு விசா மற்றும் விமான சீட்டிற்கு பணம் தேவை என குறிப்பிட்டு அவர்களிம் 2 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.
அதேபோல கடந்த சில மாதங்களாக பலரின் கையடக்க தொலைபேசி ஊடாக தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளர் என தெரிவித்து தொடர்புகொள்ளும் மோசடி கும்பல், மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி போன்ற கிளைகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு நேர்முக பரீட்சைக்கு 10 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம்வரை பணத்தை ஈசி கேஸ் மூலம் அனுப்புமாறு தெரிவித்து, பலரிடமிருந்து பணத்தைப் பெற்று அவர்களை எமாற்றியுள்ளனர்.
அவ்வாறே ஆயித்தியமலை பிரதேசத்தில் ஒரு குடும்ப பெண்ணிடம் வெளிநாட்டில் இருந்து பொதி வந்திருப்பதாக தெரிவித்து, அதனை கொண்டுவந்துதர பணம் அனுப்புமாறு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர்.
எனவே இவ்வாறு மோசடியாக பணத்தை சூறையாடும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பலர் ஏமாந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த மோசடி கும்பலிடம் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் அவர்கள் குறித்து அறியும் பட்சத்தில் பொலிஸில் முறையிடுமாறும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments