எல்பிட்டிய தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைந்ததன் ஊடாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யட்டியந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எல்பிட்டிய பிரதேச மக்கள், ஒரு நல்ல தகவலை தேர்தலின் ஊடாக வழங்கியுள்ளனர்.
அதாவது 70 சதவீத வாக்குகளை பெற்று, ஜனாதிபதித் தேர்தல்களில் எம்மால் வெல்ல முடியும் என்பதை இந்த மக்கள் இன்று காண்பித்து விட்டார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாக பயணத்தை ஆரம்பித்துள்ளன. இந்த பயணத்தால் எமக்கான வெற்றியும் உறுதியாகியுள்ளது.
இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி, நாட்டை முன்னேற்றுவதுதான் எமது பிரதான கடமையாகும். இதற்கு அனைத்து மக்களும் எனக்கான ஆணையை பிறப்பிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

No comments