தமிழ் தேசிய கட்சிகளின் இறுதி தீர்மானம் ஒத்திவைப்பு

பொது உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ் கட்சிகளும் எதிர்வரும் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசுவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்று அறிவிக்கப்படும் என சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஐந்து கட்சி தலைவர்களின் சந்திப்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களே கலந்து கொண்டனர். இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்தே இறுதி தீர்மானம் 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர் சி .வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நேற்று மாலை அவசரமாக திட்டமிட்ட சந்திப்பென்பதால், அவர்களால் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாமென கருதி, அடுத்த சந்திப்பை வரும் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்துவதென முடிவாகியுள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி நடைபெறும் அந்த சந்திப்பின் பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பது, யாரை ஆதரிப்பதென்ற நிலைப்பாட்டை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

No comments