யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீது தாக்குதல் - 35 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின்னர் 35 சந்தேக நபர்களுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015 ஆண்டு மே மாதம் 20ம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணம் நகரில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் சிலரால் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து 72 கைது செய்யப்பட்டனர். அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கட்டம் கட்டமாக பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வழக்குக் கோவை சட்டமா அதிபர் திணைக்களத்தால் பெறப்பட்டு குற்றச்சாட்டுக்களை சாட்சிகள், சான்றாதாரங்கள் ஊடாக நிரூபிக்கக் கூடிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத கூட்டம் கூடியமை, நீதி அமைச்சுக்குச் சொந்தமான நீதிமன்றச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சிறைச்சாலைக்குச் சொந்தமான சொத்துக்கு சேதம் விளைத்தமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் யாழ்ப்பாணம் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை வரும் 28ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கான அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

No comments