எது நல்லிணக்கம்? எது ஆசிரியருக்கான மரியாதை


ஆசிரியர் போல் வெறும் புகைப்படத் தொகுப்புக்காக எடுக்கப்பட்ட சிங்கள நடிகை ஒருவரின் அழகை தமிழ் இளைஞர்கள் வர்ணிப்பதை கண்டு நல்லிணக்கம் என்று கற்பனை செய்வதும் மறுபுறம் தமிழ் தேசிய உணர்வை கடந்த செயல் என்று எண்ணிக் கொள்வது. இந்த இரண்டும் உண்மையில் முட்டாள் தனமான சிந்தனை என்று தான் நான் சொல்வேன்.

குறித்த நடிகையின் புகைப்படங்களை எடுத்த புகைப்படக்கலைஞர், அந்நடிகை பற்றி சமூக வலைத்தளத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் பேசுவதும், தமிழ் ஊடகங்கள் எழுதுவதும் நல்லிணக்கம் என்றும், ஆசிரியர் ஒருவருக்கான இனம், மதம் கடந்த மரியாதை செலுத்தல் என்பது போலும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். மறுபக்கம், பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் அவரை வர்ணிப்பதா என்று எமது தரப்பில் உள்ள சிலரும் பேசிக் கொள்கின்றனர்.

இவை எனக்கு மிகுந்த வேடிக்கையையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. முகநூலை பலரும் பயனுள்ளவாறு பயன்படுத்தும் போது நகைச்சுவைக்கும், எதையாவது எழுதி லைக் பெற வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பவர்கள் ட்ரென்ட் எனும் மாயை ஒன்றுக்குள் சுழன்று கொண்டிருக்கின்றனர். அதாவது, ஒரு சம்பவம் நடந்துவிட்டால் அதை ஒரு ட்ரென்ட் என்று சொல்லி பிதற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

உதாரணத்துக்கு அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் விமான நிலையத் திறப்பு விழா, செல்வா நகர் பொண்ணு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வெள்ளம். இப்படி ட்ரென்ட் என்று சுழன்று கொண்டிருந்தனர். அதுபோல் தான் குறித்த நடிகை இரசிக்க கூடிய அழகுடன் இருப்பதால் குறித்த படங்களினால் கவரப்பட்டு அதனையும் ட்ரென்ட் என்று அவரது படங்களை காவித் திரிகின்றனர்.

"இனி நானும் சிங்களம் கற்க போகிறேன்", "சிங்களப் பெண்ணை கட்டப் போகிறேன்", "இப்படி ஒரு ஆசிரியை எமது காலத்தில் இல்லையே" என்று எழுதுவதும் ஏனைய மேற்கோள்கள் எல்லாம் அவர்களது கற்பனையும், நகைச்சுவை மற்றும் லைக் பெறும் சிந்தனை மட்டுமே தவிர அது ஆசிரியருக்கான மரியாதை செலுத்தலோ, சிறந்த ஆசிரியர் என்ற பாராட்டோ. நல்லிணக்கம் என்று கூறும் நடவடிக்கையோ கிடையாது.

அழகு தான் ஆசிரியத்துவம், அழகில் மயங்கி வாய்க்கு வந்ததை எழுதுவது தான் ஆசிரியருக்கான மாரியதை செலுத்துதல் என்று எண்ணினால் அதை விட முட்டாள் தனமான சிந்தனை வேறு எதுவும் கிடையாது. அது திறமையான ஆசிரியர்களின் கௌரவத்தை கொச்சைப்படுத்துவதும் ஆகும். அத்தோடு இது தான் நல்லிணக்கம் என்று சொல்ல தமிழ் இளைஞர்களோ மக்களோ யாரும் சிங்கள மக்களை விரோதிகளாக பார்க்கவில்லை. அவர்களில் உள்ள இனவாதிகளை, பௌத்த கடும் போக்காளர்களை மட்டுமே வெறுக்கின்றனர். இதனைக் குறித்த புகைப்படக்கலைஞர் உள்ளிட்ட சிங்கள சமூக வலைத்தள வாசிகள் மறந்துவிட்டு கற்பனையில் பேசுவதுடன் "ஒன் நேசன் ஒன் கன்றி" என்ற கோசத்தை நிலை நிறுத்த முனைகின்றனர்.

அதேபோல்த்தான் மேற்சொன்ன காரணங்களை ஆராயாமல் எம்மவர்கள் தமிழ் தேசிய உணர்வை கடந்து இராணுவத்தை கொண்டாடும் குறித்த நடிகையை நாம் கொண்டாடுவதா? போன்ற கேள்விகளுடன் மல்லுக்கட்டுகின்றனர்.

இன்று இந்த நடிகையை ட்ரென்ட் ஆக்கியவர்கள் நாளை வேறு ஒரு நடிகையின் அழகை, இடையை கண்டுவிட்டால் அல்லது வேறு சம்பவம் கிடைத்துவிட்டால் இவரை கைவிட்டுவிட்டு அடுத்த ட்ரென்டை தொடங்கி விடுவார்கள். அவர்களது தேவை லைக். அதை பல்வேறு கோணத்தில் எடுத்துக் கொண்டு நாம் மல்லுக்கட்டுவதை பார்க்கிலும் "கிறுக்குகள்" என்று அவர்களை (ட்ரென்ட் என்று அலம்புபவர்கள்) புறக்கணித்து பயனுள்ள விடயங்களை விவாதிப்பது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.

ஞா.பிரகாஸ்

No comments