சிங்கள வாக்குகளை பெற இனவாதம் கக்கப்படுகிறது- அநுர

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை வைத்து சிலர் இனவாதம் பேசுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘தற்போது அரசியல் மேடைகளில் பலாலி விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பாக பேசப்படுவதை நான் கண்டேன்.

சில மாகாணங்களில் சிங்கள மொழி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழ் மொழி முதலில் உள்ளதாகவும் பாரிய சேறுபூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களின் கட்சி அலுவலகத்தில் அவர்களும் அவ்வாறே பயன்படுத்தியுள்ளனர். இதனை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது.

இந்த விடயம் சிங்கள மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் அரசியலரங்கில் சர்ச்சைக்கு வித்திடுகின்ற பிரச்சினையாக மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தில் கோட்டாபய ராஜபக்ஸவின் அலுவலகத்திலுள்ள பெயர்ப்பலகையிலும் மொழிகள் அந்த வரிசையிலேயே உள்ளன.

அது யாழ்ப்பாணத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு. இது சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு. இத்தகைய அரசியல்வாதிகளை வெறுத்து நிராகரிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments