மக்கள் - பொலிஸ் இணைந்தாலே அது நடக்கும்: அநுர

மக்களும் பொலிஸாரும் இணைந்தாலே குற்றங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சிங்கள மக்களிடையே உள்ள சில அடிப்படைவாதிகள் முஸ்லிம் கிராமம் ஒன்றுக்குச் சென்று தாக்குதல் நடத்துவார்களா? அல்லது முஸ்லிம் மக்களிடையே காணப்படும் சில அடிப்படைவாதிகள் சிங்கள கிராமம் ஒன்றுக்குச் சென்று தாக்குதல்களை நடத்துவார்களா? என பொதுவான சந்தேகம் ஒன்று இன்று மக்களிடம் காணப்படுகிறது.

ஆனால், இந்த பிரச்சினைக்கு இராணுவத்தினரால் தீர்வினை முன்வைக்க முடியாது. ஜெனரால்கள் யுத்தமொன்றுக்குத் தான் தேவைப்படுகிறார்களே ஒழிய, மக்களிடமுள்ள சந்தேகங்களுக்கு அல்ல.

இன்று நாட்டில் நிலவுவதும் யுத்தமல்ல. எந்தவொரு அடிப்படைவாதக் குழுக்களுக்கும் அனுமதியளிக்காமை, தங்களின் சமூகத்திலுள்ள அடிப்படைவாதிகளை சரியாக அடையாளம் காணாமை அல்லது பொலிஸாரின் செயற்பாடுகளின் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினை காணலாம்.

எனினும். இப்போது இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண இராணுவ பாதுகாப்புதான் சரி என்ற ரீதியில் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்ததாக மார்த்தட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர், யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத்தளபதியை பாதுகாப்பு அமைச்சராக களமிறக்கவுள்ளதாகக் கூறுகிறார்.

இவர்கள் தேவையில்லை. இது இராணுவத்தினருக்கு செய்யும் இழிவாகும். மக்களும் பொலிஸாரும் இணைந்தாலே குற்றங்கள் குறைக்கப்பட்டுவிடும்.

யுத்தங்களை மேற்கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது. எம்மிடம் சிறப்பானதொரு புதியக் குழுவொன்று இருக்கிறது. இதற்கான பலத்தை மக்கள் எமக்கு வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments