சிவாஜியை ஆதரிப்பதா? தேர்தல் பகிஷ்கரிப்பா? முடிவு கோருகிறார் சங்கரி

தேர்தலை பகிஷ்கரிப்பதா அல்லது ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பதை 5 கட்சிகளும் தெரிவிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வழங்கிய கோரிக்கைகளை எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கூறப்படுபவை.
தென்னிலங்கை அரசியற் தலைவர்கள், அமைச்சர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சமஸ்டி கிடையாது, ஒற்றையாட்சி அரசியலின் கீழ்தான் தீர்வூ என்று திரும்பத் திரும்ப கூறியும் இவர்கள் அதனை ஏன் உள்ளடக்கி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றுதான் வேட்பாளர்களும் அவர்களைச் சார்ந்த கட்சி பிரமுகர்களும் கூறுகின்றார்கள் அதன்பின்னர் ஐந்து கட்சிகளின் கூட்டமைப்புக்கு இரண்டே இரண்டு தெரிவுகள்தான் உண்டு. தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கூற வேண்டும் இல்லையெனில்,  ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்குமாறு கூறவேண்டும். இரண்டில் ஒன்றை இவர்கள் கூறுவார்களா?
இவர்கள் தற்போது வைத்திருக்கும் கோரிக்கைகளில் சர்ச்சைக்குரிய விடயங்களை விட்டுப் பார்த்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி காலத்திற்கு காலம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்தான் உள்ளன” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments