பரூக் அப்துல்லா சிறைவக்கப்பட்டது சரியானதே! காஷ்மீர் ஆளுனர் தரப்பு;

2 மாத வீட்டுச் சிறைக்கு பின்னர் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை அவரது கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் பிரதிநிதிகள் இன்று சந்தித்து பேசினர்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் நிர்வாகி தேவேந்தர் சிங் ராணா தலைமையிலான 15 பேர் கொண்ட குழு இன்று காலை உமர் மற்றும் பரூக் அப்துல்லாவை சந்தித்து பேசினர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு முன்னெச்சரிக்கையாக அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா அவரது தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

இதேபோன்று பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியும் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
81 வயதாகும் பரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்திலும், அவரது மகன் உமர் அப்துல்லா மாநில விருந்தினர் மாளிகை அருகேயும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு தற்போது சந்திப்பு நடந்திருக்கிறது.
முன்னதாக தலைவர்கள் சிறை வைக்கப்பட்டது குறித்து ஜம்மு காஷ்மீர் ஆளுனர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் பரூக் கான் கூறியதாவது-

அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால்தான் காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. முன்பெல்லாம் காஷ்மீரில் பெரும் வன்முறைகள் நடந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோதிலும் பெரும் வன்முறைகள் தவிர்க்கப்பட்டன. இதற்கு தலைவர்கள் கைது செய்யப்பட்டதே முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments