ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் - மட்டு பட்டதாரிகள்

ஜனாதிபதி தேர்தல் களத்திலுள்ள இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை புறக்கணிப்பாளர்களானால் அகில இலங்கை ரீதியாக வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கும் நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு விடுத்த அழைப்பின், ஊடாக சந்திப்பொன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஸ்வரன் ஆகியோர் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது தமது கோரிக்கைகள் குறித்து இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் பதில் வழங்கவில்லையெனவும் இது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் பட்டதாரிகளினால் முன்வைக்கப்பட்டது.
மேலும், தமது கோரிக்கைகளுக்கு இரண்டு பிரதான வேட்பாளர்களும் தீர்வினை முன்வைக்காவிட்டால், நாடளாவிய ரீதியாகவுள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, பட்டதாரிகளின் கோரிக்கைகளை தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்துவைக்க நடவடிக்கையெடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments