கோத்தாவிற்கு பிள்ளையானின் கட்சி ஆதரவு!

கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம், நிர்வாகம் பொருளாதாரம் என்று தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய, மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சியாக தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள கட்சி காரியாலயத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,

இன்று இடம்பெற்ற கட்சியின் தலைவர் பணிக்குழு செயற்குழு மற்றும் பொதுச் சபை கூட்டத்தின் அடிப்படையில் கட்சியின் தொண்டர்களால், வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியினால் மக்களின் வலுவாக்கம், அபிவிருத்தி, கல்வி, கலை, கலாசார மற்றும் பொருளாதார ரீதியாக தயாரிக்கப்பட்டுள்ளவற்றை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்துக் கொள்வதற்கு தேவையான உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் வெளிநாட்டிற்கு சென்ற காரணத்தினால் உடன்படிக்கை செய்ய முடியாமல் உள்ளது. இருந்தாலும் அவர்களுடன் பேசிய அடிப்படையில் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

2008 முதல் 2012 வரை இதே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு இணக்கப்பாடு செய்திருந்தோம். தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை ஆட்சியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செய்துகாட்டி இருந்தது.

எங்களுடைய நோக்கம் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர்ந்து வாழ்வதேயாகும். தமிழர்களே கிழக்கு மாகாணத்தை ஆளக்கூடிய சூழல் உருவாக வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் கிழக்கு மக்களின் அனைத்து அமைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் மக்களின் அனைத்து புத்திஜீவிகளும் சேர்ந்து ஒன்றாக பயணிப்போம்.

இதேவேளை கிழக்கிற்கு தலைமை தாங்கக் கூடிய ஒரே ஒருவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தான் - என்றார்.

No comments