சஜித்தை கூட்டமைப்பு ஆதரிப்பதற்கு 13 அம்ச ஆவணம் தடையாக இருக்காது! -பனங்காட்டான்

கூட்டமைப்பின் ஆதரவு தங்களுக்குத் தேவையில்லையென்று கோதபாய அணி கூறிவரும் வேளையில், தமிழ் கட்சிகளின் கோரிக்கையை நிராகரிக்கும் கோதபாயவுடன் பேசத் தயாரில்லை என்ற தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அறிவிப்பில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? 

எந்தவொரு தேர்தலானாலும் அதில் போட்டியிடும் கட்சிகள் மக்களுக்கான தங்களின் எதிர்கால திட்டங்களை முன்வைத்து வாக்குக் கேட்பதே வழமை. இது ஜனநாயகக் கூறுகளின்  முக்கியமான பண்புகளில் ஒன்று.

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் அப்படியான எதனையும் காணமுடியவில்லை.

மாறாக, மக்களுக்கு எத்தகைய இழப்புகளை ஏற்படுத்தினோம் என்ற வீராவேச முழக்கங்களையும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்னவற்றைச் செய்ய மாட்டோம் என்பதையுமே போட்டியிடுபவர்கள் தெரிவித்து வருவதைக் காணமுடிகிறது.

இந்த வகையில், அடுத்த மாதத் தேர்தல் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக மக்களை இனவாத, மதவாத மோதல்களுக்குள் தள்ளிவிடும் ஒன்றாக முன்னெடுக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை நடத்தி தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதில் முன்னணியில் நின்றது, அல்லது செய்து முடித்தது நீயா நானா என்ற போட்டி கோதபாய மற்றும் சஜித் தரப்புகளுக்கிடையே எழும்பியுள்ளது.

யுத்தத்தை வெற்றி கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் நானே மேற்கொண்டேன், நானே யுத்தத்தையும் வென்றேன் என்று மேடைகளில் முழங்கி வருகிறார் சரத் பொன்சேகா.

யுத்த காலத்தில் இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த இவர் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அத்துடன் சஜித் பிரேமதாசவின் பரப்புரைக்கு பொறுப்பானவர்களிலும் ஒருவர்.

ஆனால், கோதபாய ராஜபக்ச யுத்த வெற்றிக்கு தாமே பொறுப்பென்று உரிமை கோருகிறார். அப்போது பாதுகாப்புப் படைகள் அனைத்துக்கும் தாமே பொறுப்பாக இருந்ததாகக் கூறும் இவர் தமது வழிநடத்தலே யுத்த வெற்றிக்குக் காரணமெனவும் மார்பு தட்டுகிறார்.

இவர்கள் இருவரும் மாறி மாறி யுத்த வெற்றிக்கு தாங்களே பொறுப்பு என்று உரிமை கோருவதன் ஊடாக ஓர் உண்மை அம்பலமாகியுள்ளது. அதாவது, ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கும், இன்னொரு தொகையினர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் தாமே காரணம் என்பதை தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் ஒப்புக்கொண்டவர்களாகியுள்ளனர்.

அடுத்துக் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சியால் ஐந்து தமிழ் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கை ஆவணம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசு, ரெலோ, புளொட் ஆகிய மூன்றுடன் சி.வி. விக்னேஸ்வரன் தலைமை தாங்கும் தமிழ் மக்கள் பேரவையும், சுரே~; பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் தற்காலிகமாக இணைந்து இந்த 13 அம்ச கோரிக்கையை ஏற்றுக் கொண்டன.

இதனை அடிப்படையாக வைத்து முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவானது. அதுவும், அந்த வேட்பாளர்கள் தங்களை அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குச் செல்வதென கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதனை எழுதும்வரை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் பேச்சுவார்த்தைக்கு இவர்களை அழைக்கவில்லை. அதேசமயம் இவ்விடயத்தை ஊடகங்கள் வழியாகப் பார்த்தறிந்த கோதபாயவும் சஜித் பிரேமதாசவும் குறிப்பிட்ட 13 அம்சம் தொடர்பாக எவருடனும் பேச மாட்டோம் என்று ஊடகங்கள் வாயிலாக அறியக்கொடுத்துள்ளனர்.

எந்த நிபந்தனைக்கும் நாம் உடன்பட மாட்டோமென்று இரண்டு வேட்பாளர்களும் தனித்தனியாக அறிவித்துவிட்ட சூழ்நிலையில் 13 அம்ச ஆவணம் செல்லாக்காசாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வாரத்து வியாழக்கிழமை கொழும்பில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்க ஏற்பாடாகியிருந்தது. ஆனால், திரு. விக்னேஸ்வரனும் சுரே~; பிரேமச்சந்திரனும் ஏனோ கலந்து கொள்ளாததால் கூட்டம் நடைபெறவில்லை. கூட்டமைப்பின் மூன்று கட்சியினரும் காத்திருந்து ஏமாந்துவிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 5 கட்சியினரும் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராய்வதாக முடிவெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் 13 அம்ச ஆவணத்தை முன்னிலைப்படுத்தி பேசத் தயாரில்லை என்ற நிலையில், 5 கட்சிகளும் கூடி எடுக்க வேண்டிய முடிவு என்ன உள்ளது என்ற கேள்வியை விக்னேஸ்வரன் எழுப்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. 13 அம்சத் திட்டம் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோமே தவிர, அதிகாரபூர்வமாக தங்களுக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லையென்று ஜே.வி.வி. வேட்பாளர் அனுர குமார திசநாயக்க தெரிவித்ததை வானொலி ஒன்றின் வாயிலாகக் கேட்ட விக்னேஸ்வரன், உடனடியாக தம்பாட்டில் ஒரு விடயத்தை முன்னெடுத்துள்ளார்.

தமிழில் தயாரிக்கப்பட்டிருந்த 13 அம்ச ஆவணத்தின் ஆங்கிலப்பிரதியை உடனடியாக சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, கோதபாய ராஜபக்ச ஆகிய மூவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

5 கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய கூட்டுப்பொறுப்பை அவர்கள் செய்யத் தவறியதால் விக்னேஸ்வரன் தாமாகவே இதனைச் செய்துள்ளார். கொழும்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத போதிலும் இவர் மேற்கொண்ட இந்நடவடிக்கை புத்திசாலித்தனமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் 5 கட்சிகளின் கூட்ட முடிவை ஓரந்தள்ளிவிட்டு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், பேச்சாளர் சுமந்திரனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தனியாகச் சந்தித்து என்ன பேசினார்கள் என்ற கேள்வி 5 கட்சி கூட்டுக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரை ஆதரிப்பதென்ற தங்களின் முற்கூட்டிய ரகசிய முடிவைச் செயற்படுத்தவே இச்சந்திப்பு நடைபெற்றதாயின், 5 கட்சிகள் சேர்ந்தெடுத்த 13 அம்ச ஆவணம் எதற்காக என்ற கேள்வி சிலரிடம் எழுந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெல்ல வேண்டுமென்பதைவிட, யார் வெல்லக்கூடாதென்பதில் பெரும்பாலான தமிழ் மக்கள் நிதானமாக உள்ளனர்.

யுத்த கால பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோதபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற முக்கிய இராணுவ உயர் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் கோதபாய மீதான அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

அதேசமயம், தமிழ் மக்கள் ஆதரவு தங்களுக்குக் கிடைக்காதென்பதை இவர்கள் நன்கறிவர். ஆதலால், சிங்கள் மக்களின் வாக்குகளை தங்கள் பக்கம் சரிப்பதற்கான சகல வழிமுறைகளையும் இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கேற்றாற்போன்று சில முக்கிய அறிவித்தல்களையும் தினமும் கேட்க முடிகிறது.

வடக்கின் பல பகுதிகளுக்கும் சென்று பரப்புரைகளை முடித்துக் கொண்ட நாமல் ராஜபக்ச, கூட்டமைப்பின் ஆதரவு தங்களுக்குத் தேவையில்லையென்று தெரிவித்துள்ளார்.

கோதபாய அணியின் முக்கிய புள்ளியான டளஸ் அளகப்பெரும ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், கூட்டமைப்பு சஜித்தை ஆதரித்தாலும் தங்களுக்குப் பாதிப்பில்லையென்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பிறகும் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா சும்மா இருப்பாரா? தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்துள்ள கோதபாயவுடன் பேசத் தயாரில்லையென்று நெற்றியடிபோல அறிவித்துள்ளார். 5 கட்சிகளின் புதிய கூட்டணிக்குள் ஒன்றாகவிருக்கும் தமிழரசுக் கட்சித் தலைவரின் இந்த அறிவிப்பு, கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளதென்பதை தெரியத்தந்துள்ளது.

13 என்பது சிங்கள தேசத்துக்கு எப்போதுமே எட்டாப்பொருத்தமான இலக்கம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13வது திருத்தம் 32 வருடங்களாகியும் நடைமுறைக்கு வரவில்லை. 13 பிளஸ் என்று மகிந்த ராஜபக்ச அடிக்கடி கூறிவந்ததும் காற்றோடு கலந்து போயிற்று.

இப்போது 5 கட்சிகள் கூட்டணியின் 13 அம்சக் கோரிக்கைக்கும் அதுவே முடிவு என்று தெரிகிறது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. 13 அம்சத் திட்டத்தை சஜித் நிராகரித்தாலும், ரணில் உடன்பட்டதாக அறிவிக்காவிட்டாலும், 3 கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பு தனது ஆதரவை சஜித்துக்கே வழங்கும் என்பது ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்ட முடிவு.

வழக்கம்போல கொஞ்சம் இழுத்தடித்த பின்னரே கூட்டமைப்பு சரியான விளக்கங்களோடு அறிவிக்கும். அதற்கான அறிக்கையை சுமந்திரன் தயாரிக்க ஆரம்பித்துவிட்டாரென்பது ரகசியமன்று.

No comments