ஒருவரை கடத்திய 9 பேருக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு!

கிளிநொச்சியில் சிறிராம் விஜிதன் என்பவரை கடத்திச் சென்றமை மற்றும் அவரின் நகைகளைக் கொள்ளையிட்டமை உட்பட மூன்று குற்றங்களுக்காக குற்றவாளிகள் 9 பேருக்கு தலா 15 ஆண்டுகள் ஐந்து மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது.

மொஹமட் நஜிமுடீன் மொஹமட் சியாம், மொஹமட் இப்ராஹிம் மரிக்கார் மொஹமட், மொஹமட் சஹீட் மொஹமட் ஹில்மி, மொஹமட் பைஸால் மொஹமட் பஸ்லு, வர்ணகுலசூர்ய ஜூட் ஜானக பெர்னாந்து, தாவூத் ஷாகி மொஹமட் அசான், ஹேரத் பத்திரணாலேக வந்தனா குமாரதுங்க, சரிஜோன் மொஹமட் ரிஸ்வான் மற்றும் அப்துல் ரஹிட் மொஹமட் நிஸான்டீன் ஆகிய 9 பேருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிராம் விஜிதன் என்பவர் 2015ம் ஆண்டு ஓகஸ்ட் 18ம் திகதி கடத்திச் செல்லப்பட்டார். ஏ-32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற டிபென்டர் ரக வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது 9 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டவர், சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

3 இலட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு கஞ்சாவை வழங்காத காரணத்தினால், தாம் அவரை கடத்திச் சென்றதாக சந்தேகநபர்கள் 9 பேரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடத்தும் பொதுநோக்குடன் சட்டவிரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராகச் செயற்பட்டமை, சிறிராம் விஜிதனின் உடமையிலிருந்த 58 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கமாலை, 36 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைச்சங்கிலி மற்றும் 24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோதிரம் என்பவற்றைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரிகள் 9 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2017ம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சட்ட மா அதிபரால் குற்றப்பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விளக்கம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்று வந்தது. வழக்குத்தொடுநர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தினார். எதிரிகள் சார்பில் நா.சிறிகாந்தா முன்னிலையானார். விளக்க சமர்ப்பணங்களின் நிறைவில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

எதிரிகள் மீதான 5 குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டு 9 பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர் என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

மேலும், எதிரிகள் 9 பேரும் ஆள் ஒருவரைக் கடத்துவதற்காக சட்டவிரோத கூட்டம் ஒன்றைக் கூடியமைக்காக 5 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படுகிறது. தண்டப் பணத்தை செலுத்தத் தவறின் 2 மாத சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

எதிரிகள் 9 பேரும் ஆள் ஒருவரைக் கடத்தி சட்டவிரோதமாக சிறைப்படுத்தும் பொது நோக்கத்துடன் செயற்பட்டமைக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுகிறது. தண்டப் பணம் செலுத்தத் தவறின் 5 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

எதிரிகள் 9 பேரும் கடத்திச் சென்ற ஆளின் உடமையிலிருந்த தங்க நகைகளைக் கொள்ளையிட்டமைக்காக 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்படுகிறது. தண்டப் பணம் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

9 எதிரிகளும் சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க முடியும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.

தண்டனைக் கைதி தப்பியோட முயற்சி

இன்னைய தினம் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் வழக்கேட்டில் கையொப்பமிட அழைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் இருந்து தப்பியோட முயற்சித்தார். எனினும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துரத்திச் சென்று நீதிமன்றிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் வைத்து தண்டனைக் கைதியை மடக்கிப் பிடித்தனர்.

குற்றவாளி ஒருவரை கைது செய்ய உத்தரவு

மொஹமட் சஹீட் மொஹமட் ஹில்மி என்ற குற்றவாளி இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மன்றுக்கு மருத்துவச் சான்றிதழுடன் தெரியப்படுத்தினார். இதனால் மொகொமட் சஹீட் மொகொமட் ஹில்மியை கைது செய்யுமாறு பகிரங்கப் பிடியாணை பிறப்பித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

கடத்தலுக்கு பயன்படுத்திய டிபென்டர் வாகனம் வாடகைக்கு அமர்த்திக் கொண்டுவரப்பட்டது. இதனால் அந்த வாகனம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிணை முறையை நீக்கி உரிமையாளரிடம் வாகனத்தை ஒப்படைக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments