ரணில் தலையாட்டிலேயே சஜித்திற்கு ஆதரவு?


ரணில் சொன்னால் மாத்திரமே தாங்கள் சஜித்திற்கு ஆதரவளிக்க முடியுமென எம்.ஏ.சுமந்திரன் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சஜித், 'நான் இம்முறை போட்டியிடாமல் விட்டுக்கொடுக்கலாம். எனக்கு அதில் ஆட்சேபனையில்லை. எனக்கு இன்னும் காலமிருக்கின்றது. ஆனால், என்னைத் தவிர்த்தால், கட்சிக்குள் வெற்றியடையக் கூடியவர்கள் யார் இருக்கின்றார்கள்? வேறு யார் போட்டியிட்டாலும் கட்சி தோல்வியடையும்.

கட்சி வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிட விரும்புகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எனக்கு ஆதரவு வழங்கவேண்டும்' எனத்தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் ஆகியோருக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் மதியவிருந்தளித்தனர்.

இந்தப் பேச்சின்போது கருத்துரைத்த அமைச்சர் சஜித்,'இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நான் களமிறங்குவதில் உறுதியாக உள்ளேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் நிச்சயம்.

ஜனாதிபதியாக நான் பதவியேற்ற முதல் ஆறு மாதங்ககளுக்குள் இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன். அதற்கு மேல் காலத்தை இழுத்தடித்தால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போய்விடும்.

ஒற்றையாட்சியைக் கடந்து வேறொரு வடிவத்தில் தீர்வு என்றால் சிங்கள மக்கள் குழப்பமடைந்து விடுவார்கள். சிங்கள மக்களைக் குழப்பமடைய வைத்து தீர்வொன்றை எட்ட முடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரியவேண்டும்'

'வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தலாம். ஒற்றையாட்சி என்ற அரசியலமைப்புக்குள் சுயாட்சிக்குரிய அம்சங்களுடன் பல்வேறு நாடுகளில் அரசியலமைப்பு உள்ளது. வார்த்தைகளில் சிக்காமல் - வார்த்தைகளால் சமாளித்து - அதிகாரங்களைப் பகிர்ந்து அரசியலமைப்பை உருவாக்கலாம்' என்றார்.

No comments