தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாது; ஐ.நா அவையில் விவேகானந்தன்

தமிழீழ விடுதலையை நோக்கிய தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாது. தமிழீழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கம்vவலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42-வது அமர்வில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும்படியாக ஐ.நா.வின் மேற்பார்வையில் பொதுக்கெடுப்பு நடத்துவதே தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக இருக்கும் என்று கீழ்கண்ட தகவல்களை உள்ளடக்கி, மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் விவேகானந்தன் உரையாற்றினார்.

வியன்னா உடன்படிக்கை சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால் இலங்கையில் தமிழீழ மக்களுக்காக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது.



தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடி மக்கள். ஆங்கிலேய ஆட்சியின் போது  நிர்வாக வசதிக்காக தமிழர்கள் சிங்களப்பகுதியுடன் இணைத்து ஒன்றுபட்ட இலங்கை உருவாக்கப்பட்டது. இலங்கையை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய நாள் முதல் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடைபெறுகிறது. தமிழர்களின் மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை புறக்கணிக்கப்பட்டது. ஒவ்வொரு ஒப்பந்தங்கள் போடப்படும் போதும், தமிழர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் உரிமை வழங்கப்படுவதை கண்டித்து சிங்கள இனவாத குழுக்கள் தமிழர்கள் மீது பயங்கரவாதத்தை ஏவியது.

தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை பெரும் அரசியல் தீர்வை 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் முன்வைத்தனர். அதனை அடிப்படையாக கொண்டே 1977 தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தனர்.

இலங்கையின் தொல்லியல் துறை புத்த விஹார்களை தமிழர்களின் பகுதிகளில் நிறுவியது. இலங்கையின் அனைத்து அரசு துறைகளும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்தது.

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி வழங்க இலங்கைக்கு மேலும் அதிக அவகாசம் வழங்கக்கூடாது என 2019, பிப்ரவரி 25-இல் முழு கடையடைப்பும் பேரணியையும் தமிழர்கள் நடத்தினர்.

தற்போது அரசோ இதற்கு முந்தைய அரசுகளோ தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க ஒரு போதும் முயற்சித்ததில்லை.

தமிழர்களின் பிரதிநிதியான வடக்கு மாகாண சபை 2018 செப்டம்பர் மாதம், ஐ.நா. பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை அரசியல் தீர்வாக முன்வைத்தது.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய, பொதுவாக்கெடுப்பு நடத்தும் ஜனநாயக செயலை முன்னெடுக்க வேண்டுமென இவ்வவையை கேட்டுக்கொள்கிறோம், என கூறியுள்ளார்.

No comments