அரசுக்கான ஆதரவை கூட்டமைப்பு மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்து


முல்லைத்தீவிற்கு இன்றைய நாள் (29) விஜயம் மேற்கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் மாவை சேனாதிராசா உள்ளிட்ட குழுவினர் தமிழர் மரபுரிமைப் பேரவையினுடைய பிரதிநிதிகள் மற்றும், நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

முல்லைத்தீவு - கோவிற்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், அண்மையில் இடம்பெற்ற நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம் மற்றும் தமிழ்மக்களினுடைய தற்கால நிலைமைகள் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

அத்துடன் கலந்துரையடலின் இறுதியில் தமிழ் மக்களின் சமகால நிலவரம் தொடர்பாக ஐந்து அவசர கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களிடம் தமிழர் மரபுரிமைப் பேரவையினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளையும், அரசு ஏற்கத் தவறும் பட்சத்தில், கூட்டமைப்பு அரசிற்கு வழங்கும் ஆதரவினை மீள் பரிசீலணை செய்யவேண்டும் எனவும் தமிழர் மரபுரிமைப் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சந்திப்பு மற்றும் வழங்கப்பட்ட மகஜர் தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவையினர் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய சந்திப்பானது தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சடடரீதியான உதவியைக் கோருவதாக அமையவில்லை, மாறாக அரச அனுசரணையுடன் மத்திய அரச நிர்வாகக் கட்டமைப்புக்களால், வட, கிழக்கு பகுதிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற திடடமிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில், அவசர மற்றும் நியாய பூர்வமான கேரிக்கைகளை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளாக,

நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயமாகும். இவ்வாலயதினைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து விகாரை அமைப்பதை உடன் நிறுத்த, காத்திரமான அரசியல் அழுத்தங்களை வழங்கவேண்டும்.

வடமாகாணத்தில் வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட, தொலலியல் பிரதேசங்கள், நம்பகத்தன்மையான தமிழ் தொலலியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், குறித்த பிரதேசங்களின் உள்ளூர் நிரவாக, மற்றும் கிராம மட்ட மக்களின் பங்குபற்றுதலுடனான கூட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில், ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்படும் வரை வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட இடங்களில் தற்போதுள்ள இடங்களை விட மாற்றங்கள், திரிபுபடுத்தல்கள், புதிய கட்டுமானங்கள், மேற்கொள்ளப்படாது பேணப்படல் வேண்டும். என்பதை வலியுறுத்தி அரசாணை ஒன்றினை உடன் வெளியிட குறித்த(கலாச்சார) அமைச்சிடமிருந்து எழுத்து மூலம் வாக்குறுதி பெற வேண்டும்.

வடமாகாணத்தில் மகாவலி "எல்" அபிவிருத்தி வலயம் மூலம் ஏற்படுத்தப்பட்ட, திடடமிட்ட சிங்களமயமாக்கல்கள், தற்போது தொடர்ந்து இடம்பெறுவதனால், குறைந்த பட்சம் 2007ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தல் மீறப்படுவதுடன் 1988ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தல், எல்லைக் கிராமத் தமிழ் மக்களின் பங்குபற்றுதலுடன் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்படல் வேண்டும். திரவரும் நாட்களில் மகாவலி அதிகார சபையினூடாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு மாகாணத் திணைக்களங்களினூடாக மேற்கொள்ளப்படவேண்டும்.

G.P.S தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 2009இன் பின்னர் வர்த்தமானப் பிரசுரம் செய்யப்பட்ட, ஒதுக்கக் காடுகள் தொடர்பான எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.

வனஜீவராசிகள் திணைக்களத்தினால், 2009 இன் பின் வர்த்தமானப் பிரசுரம் செய்யப்பட்ட தேசியப் பூங்கா, மற்றும் இயற்கை ஒதுக்க இடங்களை மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றுடன் தொடர்புடையது ஆகையால் இவற்றுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்படல் வேண்டும் என்பதுடன், மக்கள்குடியிருப்புகள், கலாச்சாரம், வாழ்வாதாரம் என்பவை பாதிக்கப்படாவண்ணம் "அரசாணை" ஒன்று உடன் வெளியிடப்படல் வேண்டும்.

இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காத பட்சத்தில், தமிழ்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவை மீள் பரிசீலணை செய்யவேண்டுமெனவும், வழங்கப்பட்ட மகஜரில் வலியுறுத்தியுள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இச் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்மாவடட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சி.சிவமோகன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் தமிழர் மரபுரிமைப் பேரவையினுடைய பிரதிநிகள், நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் எனப் பலரும்கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments