திலீபன் நினைவேந்தலை நாமே செய்வோம் முதல்வர் கிடுக்குப்பிடி

தியாகதீபம் தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் மாத்திரமே இடம்பெறும் என்று மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆரம்ப நாள் நிகழ்வு எதிர்வரும் 15.09.2019 அன்று தியாகதீபம் திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் இடம்பெறும்.

அஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு அரை மணித்தியாலங்களுக்கு முன்பாக 9.00 மணிளயவில் நினைவுத் தூபிக்கு முன்னால் ஒன்று கூட வேண்டும். நிகழ்வின் நினைவுச் சுடரினை ஏற்றும் மாவீரர்களின் பெற்றோரை மாநகரசபை தேர்வு செய்துள்ளது. நினைவுச்சுடரை தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்தலாம் என்றும் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

திலீபன் நினைவு மற்றும் ஏனைய தேசிய நினைவு தினங்களை அரச கட்டமைப்புக்கள் அல்லாமல் பொது செயற்பாட்டாளர்கள் மூலம் ஒழுங்கமைக்க வேண்டுமென பலரும் வலியுறுத்திய போதும், திலீபன் நினைவிடம் தமது ஆளுகைக்குள் அமைந்துள்ளதென குறிப்பிட்டு, கடந்த முறையை போலவே இம்முறையும் யாழ் மாநகர சபை முதல்வர் நினைவேந்தல் நிகழ்வை தன்னிச்சையாக ஒழுங்கமைத்துள்ளார்.

திலீபன் 30ம் ஆண்டு நினைவேந்தல் நடந்து கொண்டிருந்த போது, திலீபன் நினைவிடத்திற்கு எதிர்ப்புறமாக ஆர்னோல்ட் பிராந்திய முகாமையாளராக இருக்கும் காப்புறுதி நிறுவனத்தின் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments