கோத்தாவிற்கே வெற்றி: களமிறங்கிய புலனாய்வு?


2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது முடங்கிய மகிந்த ஆதரவு சிங்கள ஊடக தரப்புக்கள் மீண்டும் மும்முரமாக தொடங்கியுள்ளன.பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தெரிவித்து செய்தியொன்றை எழுதியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த ரத்துகமகே இலங்கை இராணுவப்புலனாய்வு பிரிவினருடன் நெருங்கிய உறவை கொண்டவரென அடையாளப்படுத்தப்பட்ட நபராவார்.

2005ம் ஆண்டுவரையாக விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டு பகுதிகளில் செய்தி சேகரிப்பதெற்கென பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளராக நடமாடிய இந்நபரே பெருமளவிலான வீடியோ பதிவுகளை இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் கையளித்து வந்ததாக அவரது சக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் குறித்த நபர் கோத்தாவிற்கு ஆதரவை திரட்ட இராணுவப்புலனாய்வு பிரிவின் வழிநடத்தலில் வெளியிட்ட செய்தியையே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்டதாக விசாரணையினை எதிர்கொள்ளவேண்டியேற்பட்டுள்ளது.

எனினும் சிவரூபனை கைது செய்த இராணுவ புலனாய்வு பிரிவு, விசாரணைகளிற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் வைத்தியர் சிவரூபனை உடனடியாக கையளித்திருந்தது.

இந்நிலையில் வெளியிடப்பட்ட செய்தி இராணுவப்புலனாய்வு பிரிவினரால் ரத்துகமகேயினை பயன்படுத்தி உள்நோக்கத்துடனேயே கசியவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வுpசாரணையின் போது தனது செய்திக்கான மூலத்தை வெளிப்படுத்த ரத்துகமகே மறுத்துவிட்டதாக தெரியவருகின்றது. 

அதேவேளை இந்த விசாரணையை அடுத்து தன்மீது வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் பயங்கரவாதத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் தன்னிடம் தெரிவித்ததாக ரத்துகமகே கூறியுள்ளார்.

கிளிநொச்சி - பளை வைத்தியசாலையில் பணிப்பாளரான வைத்தியர் சின்னையா சிவரூபன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்தார் என்றும் ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஓகஸ்ட் 18 ஆம் திகதி இரவு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்கான சதித் திட்டமொன்று தீட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள நாளிதழான திவியினவிற்கு ரத்துகமகேயே செய்தியை அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை அடிப்படையாக வைத்து பெரும்பாலான தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் மருத்துவர் சிவரூபன் கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்ய திட்டமிட்டதாக செய்திகளை பகிர்ந்திருந்தன. 

No comments