பணத்தை சுருட்டிய ஐங்கரன் கருணாமூர்த்தி! பேரதிர்ச்சியில் லைகா குழுமம்!

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனமான லைகா  நிறுவனத்தில் நடந்திருக்கும் ஊழல் மற்றும் கையாடல் பற்றிய செய்தி தென்னிந்திய சினிமா வாட்டத்தைபரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

 மற்றொரு படத் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்தின் தலைவரான கருணாமூர்த்தியும் அவரது பெண் உதவியாளரான பானும் இணைந்து தங்களுடைய நிறுவனத்தில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்தும், பலவிதங்களில் நிறுவனத்திற்கு செலவுகளை வைத்து இதன் மூலம் நிறுவனத்திற்கு பெருத்த பண இழப்பை ஏற்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக சொல்லி அவர்கள் இருவர் மீதும் லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம், சென்னை காவல்துறையில் நேற்று புகார் ஒன்றை கொடுத்துள்ளது.
புகார் கொடுத்தக் கையோடு புகார் பிரதிகளையும் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது லைகா நிறுவனம்.
லைகா நிறுவனம் கருணாமூர்த்தி மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சுருக்கம் இங்கே :

லைகா நிறுவனத்தின் ஆலோசகராக ஐங்கரன் கருணாமூர்த்தி கடந்த 2014-ல் இணைந்தார். அவர் ஓர் இலங்கைத் தமிழர், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்.
ஏற்கெனவே சினிமா தயாரிப்பில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவர் மீது லைகா பெருமதிப்பும் முழு நம்பிக்கையும் கொண்டிருந்தது. லைகா நிறுவனத்துக்காக கதை கேட்பது, கதையை உறுதி செய்வது, நடிகர், நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்களை முடிவு செய்வது. அவர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது என அனைத்துப் பணிகளையும் கருணாமூர்த்தி செய்து வந்தார். அவருக்கு பானு என்பவர் உதவியாக இருந்தார்.
 
நிதி மேலாண்மை பொறுப்பு முழுவதுமாக நம்பிக்கையின் அடிப்படையில் கருணாமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடைய கையெழுத்து இருந்தால்தான் எந்த ஒரு காசோலையும் செல்லுபடியாகும். அந்த அளவுக்கு அவருக்கு லைகா நிறுவனம் அதிகாரம் கொடுத்திருந்தது.
ஆனால் கருணாமூர்த்தி கடந்த 2 ஆண்டுகளாகவே லைகாவின் நம்பிக்கையைச் சிதைத்து வருகிறார். சாட்டிலைட் உரிமைகளில் நிதி மோசடி, வெளிநாட்டு உரிமையில் மோசடி, ரொக்கப் பணம் கையாடல் என ஈடுபட்டு வந்துள்ளார். அவருடைய உதவியாளர் பானுவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

No comments