நீராவியடி இடைக்கால அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு?


முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் நீதிமன்ற கட்டளையைமீறி பிக்குவின் தகனம் செய்யப்பட்டமை தொடர்பிலும் அதன் பின்பு இடம்பெற்ற சம்பவங்களிற்காகவும் பொலிசாரால் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கைகள் தொடர்பில் திங்கட் கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் பிக்குவின் தகனக் கிரிகை மேற்கொள்ள மேற்கொண்ட முயற்சியை தடைசெய்யுமாறு ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணிகள் வழக்கின் கட்டளையை எதிர் மனுதாரர்களின் சட்டத்தரணிகளின் அழைப்பின் பெயரில் தெரிவிக்கச் சென்ற சமயம் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அத்துடன் நீதி மன்ற கட்டளையை மீறி ஆலய தீர்த்தக்கேணி பகுதியில் உடலம் தகனம் செய்தமை தொடர்பில் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றிற்கு பொலிசார் இரு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கில் நேற்று வெள்ளி வரையான காலப்பகுதிவரை வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இக்காலப் பகுதிக்குள் சட்ட மா அதிபர் எழுத்து மூல உறுதிமொழி வழங்க வேண்டும். அவ்வாறு அல்லாவிடில் பணிப் புறக்கணிப்பை தொடர்வதா இல்லையா என மீண்டும் கூடி மீளாய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No comments