பலாலி கிழக்கு காணியை விடுவிக்க இராணுவத்திற்கு மாற்றுக் காணி


வலிகாமம் வடக்கில் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கு வசதியாக, அவர்களிற்கு மாற்று காணிகளை அடையாளம் காண்பதென நேற்று முடிவாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மேற்படி முடிவு எட்டப்பட்டது.

வலி வடக்கில் பலாலி வீதிக்கு கிழக்கு பக்கமாக இராணுவத்தின் பிடியிலுள்ள 727 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாது, மயிலிட்டி பக்கமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றி குறிப்பிட்ட காணிகளில் நிரந்தர முகாம் அமைக்கவுள்ளதாக இராணுவம் தெரிவித்திருந்தது.

இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்று ஆராயப்பட்டது. தனியார் காணிகளில் நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், சி.சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வல்லைவெளியில் முகாம் அமைக்கலாமென மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமக்கு பொருத்தமான பிறிதொரு இடத்தை தந்தால், பலாலி வீதியின் கிழக்கு பகுதியை விடுவிக்க முடியுமென இராணுவம் தெரிவித்தது.

இதையடுத்து, இராணுவத்திற்கு நிரந்தர முகாம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் கண்டு தெரிவிக்கும்படி யாழ் அரச அதிபரிடம், ஆளுனர் உத்தரவிட்டார்.

அதேவேளை, மண்டைதீவு வெலிசுமன கடற்படை தளத்திற்காக அபகரிப்பப்பட்ட 18 ஏக்கர் காணியையும் விட முடியாது, அது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என கடற்படை தெரிவித்தது எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி அதை எதிர்த்தார். மண்டைதீவு சிறிய கடல், வெளிநாட்டு படைகளும் வர வாய்ப்பில்லை, எந்த அடிப்படையில் அது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என கேள்வியெழுப்பினார்.

எனினும் கடற்படையினர் அதற்கு பதிலளிக்கவில்லை.

No comments