Header Shelvazug

http://shelvazug.com/

எழுக தமிழ் பேரணியை இனமான எழுச்சியாகக் காட்டுங்கள்! வ.கௌதமன் அழைப்பு!

தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தமிழ்ப் பேரரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான வ.கௌதமன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நூற்றாண்டின் பெரும் மனிதப்பேரவலம் நம் தமிழீழத்தில் நடந்தேறியதை அவ்வளவு எளிதில் உலகம் மறந்திட இயலாது. சிங்களப் பேரின அரக்கர்களால் நடத்தப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை திட்டமிட்ட இனப்படுகொலை. பத்து ஆண்டுகள் கடந்து காயங்கள் ஆறிவிட்டன. ஆனால் இன்னும் எமக்கு மனக்காயம் ஆறவில்லை. அன்று ஒலித்த உயிரின் அலறல் இன்றுவரை எங்கள் செவிப்பாறையில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.

பாஸ்பரஸ் குண்டுகளால் குதறப்பட்ட குழந்தைகளும், கிபிரால் கிழித்து எறியப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களும், மண்ணுக்காக உயிர் நீத்து மண்ணோடு மண்ணாக கலந்துவிட்டனர். பல நாடுகள் கைகோத்து அரங்கேற்றிய இனப்படு கொலையில் எமது தேசம் இழந்த உயிர்ச்சேதம் கணக்கற்றவை. இலங்கை இராணுவ போர்க்குற்றம் மீதான எவ்வளவு ஆதாரங்கள் அடுக்கி அடுக்கி உலக நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றாலும், எமக்கான நீதியை தள்ளி வைத்துக் கொண்டே போகிறது பன்னாட்டு நீதி மையங்கள்.

ஆனாலும், தமிழீழத்தில் வாழும் சொந்தங்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்களும் தொடர்ந்து வீதிகளில் எமது நீதிக்கான கோரிக்கையை முன்னிறுத்தி அறவழியில் ஆர்ப்பரிக்கின்றனர். இந்த அறவழிபோர் பன்னாட்டுச் சமூகத்தை அசைக்காமல் ஓயாது என்பது மட்டும் என் போன்ற இன உணர்வாளர்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் உறுதிக்கு எனது குரல் மட்டுமல்ல காயங்களோடும் அறம் மிகுந்த கோபங்களோடும் போராட்டக் கலங்களில் நின்று அதி லிருந்து அரசியல் களத்திற்கு வந்து உறுதியோடு உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேரரசு கட்சியின் இளைய தலைமுறையும் எப்போதும் வலு சேர்க்கும்.

செப்டம்பர் – 16 அன்று எழுக தமிழ் பேரணி நடக்கவிருக்கிறது. அது எழுக தமிழ் பேரணி மட்டுமல்ல! வீழ்ந்த இனத்தை எழுப்பும் சனநாயக போரணி! தமிழ்மக்கள் பேரவையின் ஒருங்கிணைக்கிற இந்த மாபெரும் பேரணி உலகத்தின் பார்வையை திசை திருப்பும் என்பதில் ஐயமில்லை. இதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் பல கோரிக்கைகளோடு நடந்தேறியிருக்கிறது. இம்முறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரளாக நடந்தேறுகிறது.

தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் எனது மனப்பூர்வமான வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுக தமிழ் பேரணி உலகெங்கு வாழும் தமிழின உணர்வாளர்களை மீண்டும் தட்டியெழுப்பும் என்ற நம்பிக்கையை இந்த பேரணி வாயிலக உருவாகும் வாய்ப்பு  ஏற்படும் என உறுதியாக நம்புகிறேன்!

தமிழீழ தேசத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் சிங்கள குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழர்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இன விடுதலைக்காக போராடி தங்களது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை அவமதிக்கும் விதமாக மாவீரர் துயிலும் இல்லங்களை அடித்து நொறுக்கிவிட்டு அங்கு புத்தர் சிலைகளை நடுகிறார்கள். அந்த வீரத்தின் அடையாள அழிப்பு தடுக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் மீள் குடியமர்வுக்கான முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிய வேண்டும்.

அரசியல் கைதிகளாக சிறைக்கொட்டடியிலே சித்திரவதைக்கு உட்பட்டு கிடக்கிற தமிழர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டும்.

கிட்டத்தட்ட 25 ஆயிரம் தமிழர்களுக்கு மேல் காணாமல் செய்யப்பட்டோர்கள் பட்டியலில்  உள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள்? உயிரோடு உள்ளார்களா? இல்லை என்றால் என்ன செய்தார்கள்? என்கிற உண்மைகளை வெளிக்கொண்டுவர  வேண்டும்.

இனபிரச்சினைக்கான ''தீர்வு'' காணாமல் காலம் தாழ்த்துகிற கபடத்தனம் அம்பலப் படுத்தி, உடனடித்தீர்வுக்கு சிங்கள பேரினவாத அரசை  காலம் தாழ்த்தாது நிர்பந்திக்க வேண்டும்.

போர் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான ஒரு அனைத்துலக விசாரணையை வலியுறுத்த வேண்டும் . மேற்கண்ட கோரிக்கைகள் மட்டுமல்லாது பன்னாட்டு நீதிமன்றத்தில் நாம் முன் வைக்கும் நிரந்தர தீர்வான,

1. இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது.

2. இலங்கை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு, அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று இலங்கைக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

3. போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனிதஉரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் இலங்கைக்காக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்.

4. இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்!

மேற்கண்ட முதன்மைக் கோரிக்கைகளை  எழுக தமிழ் பேரணியில் மட்டுமல்ல, அனைத்து போராட்ட, ஆர்ப்பாட்ட பேரணிகளிலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்!

இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டு மல்லாது  அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பதை ஐ.நா. பொது சபை அறிவிக்க வேண்டும். சர்வதேச விசாரணையும் பொது வாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரேதீர்வு என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கவேண்டும்!

தமிழீழத்தில் மட்டுமல்லாத உலகெங்கும் தமிழர் எழுச்சிப் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற பெரும் ஆர்வம் தொடர்ந்தும் என் போன்றோருக்கு இருக்கிறது. அந்த வகையில், எழுக தமிழ் பேரணி அதைத் தாண்டிய பெரும் பேரெழுச்சியை கொண்டுவரும் என்பதை மனதில்கொண்டு தமிழ்மக்கள் பேரவை மேற்கொள்வது வரவேற்கத் தக்கதாகும்.

தமது இனவிடுதலை அரசியல் தொடர்பான விழிப்புணர்வும், அது தொடர்பான  உரையாடலுமே நம்பிக்கையான மாற்றுத்திட்டங்களை ஏற்படுத்தும். அந்த இடத்தினை நமது புதிய செயற்திட்டங்கள் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைக்கும் போராட்டங்களாக மாற்றம் பெறும். அவ்வாறே இப்பொழுது 'எழுக தமிழ்' கவனம் பெறுகின்றது.

இலங்கை இனவெறி அரசின் இனப்படுகொலையின் மனக் காயம் ஆறாது. தமிழர்கள் நாம் பெரும் எழுச்சிப் போராட்டங்கள் வாயிலகாவே நமக்கான விடியற்கதவை திறக்க வேண்டியுள்ளது.  இது தொடர்ந்து நடந்தேறும். அந்த நம்பிக்கைத் திறவுகோலாய் ”எழுக தமிழ்” எழுச்சி அமைய வாழ்த்துகிறேன்.

பெருந்திராளன எனது மக்கள் இப்பேரணியில் இணையவும், இனஉணர்வாளர்களின் மன எழுச்சியை இவ்வுலகம் கவனம் கொள்ளவும் இப்பேரணி நமக்கு ஓர் வாய்ப்பாகும். தமிழக தமிழர்களின் ஆதரவு எப்போது இதுபோன்ற போராட்டத்தை ஆதரித்தும் ஆர்ப்பரித்தும் எழுச்சிக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலாக யார் எப்படி இருந்தாலும் வடக்கு கிழக்கை சேர்ந்த எனது உயிருக்கு நிகரான பள்ளி கல்லூரி தம்பி தங்கைகள் ஒன்றாக நில்லுங்கள். முன்னோடிகள் வழிகாட்ட இளைஞர்கள் வழி நடத்துங்கள்.

வெல்வோம்.

பேரன்போடும்

பெரும்பாசத்தோடும்

வ. கௌதமன்

பொதுச்செயலாளர்

தமிழ்ப் பேரரசுக் கட்சி.

No comments