எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்து பங்கேற்பது அவசியமாகும்!

தமிழர்களது அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கியதான தீர்வுத்திட்ட யோசனைகளை முன்னிறுத்தியும் தமிழ் மக்களது சமகால போராட்ட முன்னெடுப்புகளில் வலியுறுத்தப்பட்டுவரும்
கோரிக்கைகளுக்கு கூட்டுப்பலம் சேர்க்கும்வகையிலும் தமிழ் மக்கள் பேரவையால் செப்டம்பர் 16 இல் முன்னெடுக்கப்படவிருக்கும் 'எழுக தமிழ் 16.09.2019' எழுச்சிப்பேரணிக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை முழுமையான ஆதரவினை வழங்குவதுடன் இம்மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்துத்து பங்கேற்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும் எதேச்சதிகாரப்போக்கும் வரைமுறைகளேதுமின்றி தமிழர் தாயகத்தில் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவையெதையுமே கண்டும் காணாதவர்களாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் செயற்பட்டுவருவது மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தமிழ் மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறான கையறு நிலையில்தான் தமிழ் மக்கள் தாமாகவே தத்தமது பிரச்சினைகளை முன்வைத்து தனித்தும் கூட்டாகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகட்டும், சட்டவிரோதமான முறையில் சிறையிலடைக்கப்பட்டவர்களாகட்டும் அவரவரது தனித்தான நலன்களுக்காக துன்பச்சிலுவை சுமக்கவில்லை. உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் வல்வளைப்புச் செய்யப்பட்டிருக்கும் தமிழர்களது பாரம்பரிய இடங்கள் அந்தந்த காணி உரிமையாளர்களுடனான தனிப்பட்ட பிணக்குகளின்பாற்பட்டு ஆக்கிரமிக்கப்படவில்லை. இவ்வாறானவை அனைத்தும் தமிழர்கள் என்பதற்காகவே எம்மவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழர்களாகிய நாம் அனைவரும் உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் தாயகத்தில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் 2019 எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிப்பது வரலாற்றுக்கடமையாகும். குறிப்பாக தாயகத்தில் இருக்கும் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினரும் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து ஓரணியில் அணிதிரள வேண்டும். ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மானமறவர்கள் எதற்காக தம்முயிரைத் தியாகம் செய்தார்களோ அத்தியாகத்தினை அர்த்தமுள்ளதாக்கும் அனைத்து முன்னெடுப்புகளிலும் பங்கேற்பது தமிழர்களாகிய அனைவரது கடனாகும்.

தாய் மண் விடுதலை பெறவும், வருங்கால சந்ததி சுதந்திரக்காற்றை சுவாசிக்கவுமாக முகம்தெரியாமல் தம்முயிர்துறந்த தியாகசீலர்களது தியாகத்திற்கு முன்பாகவும், கந்தகம் சுமந்து காலனை வென்று சாவினை விரும்பியழைத்து வெடித்துச்சிதறி வானோடு வானாகவும், கடலோடு கடலாகவும், காற்றோடு காற்றாகவும், மண்ணோடு மண்ணாகவும் கலந்துவிட்ட கருவேங்கைகளின் சிதறுண்டுபோன சதைத்துண்டங்களுக்கு முன்பாகவும் எம்மைப் பிரித்தாளும் தன்முனைப்பு, விடாக்கொண்டன் கொடாக்கொண்டன் போக்கு என்பன கால்தூசாகும்.

எமது வரலாற்றை மனதில் நிறுத்தி தமிழ் தேசத்தின் விடிவிற்காகவும் தமிழ் மக்களின் இருப்பிற்காகவும் கொள்கைவழி ஒன்றுபட்ட பெரும் சக்தியாக தமிழ்த் தேசிய அரசியல் வழியே பயணித்து வரும் அனைத்து தரப்புகளும் எழுக தமிழராய் அணிதிரளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

No comments