பட்டாசு ஆலையில் தீ விபத்து, 23 பேர் பலி!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்  தலைநகர் சண்டிகரில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ளது படாலா நகரத்தில்  உள்ள  ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 27 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஆர்.டி.ஓ. பல்பீர் ராஜ்சிங் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘இந்த ஆலையில் மிக அதிகமாக பட்டாசுகள் வைக்கப்பட்டிருக்கிறது. விதிமுறைகளை மீறி பட்டாசுகளை குவித்து வைத்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. எப்படி தீப்பற்றியது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்’’ என்றார்.
இந்த பட்டாசு ஆலையில் ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். அப்போது இந்த தொழிற்சாலையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின், மீண்டும் லைசென்ஸ் பெறப்பட்டு இயங்கி வந்தது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

No comments