மருத்துவமனையில் வைகோ; மகனைக் கொண்டாடும் தொண்டர்கள்

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மதிமுகவின் மாநிலமாநாடு கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக மதிமுகவினர் சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம் என்று பல பகுதிகளிலும் மதிமுக கொடிகளையும்,பதாகைகளையும் நிறுவியிருந்தனர். இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது, அவர்களுக்கும் மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின்பேரில், மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை கைது செய்தனர். தற்போது அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களின் குடும்பத்துக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வந்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி.

வழக்கமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே இதுபோன்று கட்சியினரின் வீடுகளுக்குச் சென்று விசாரிப்பார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாகவும், புத்துணர்வுக்காகவும் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள ஆர்ய மருத்துவமனையில் வைகோ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், தான் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் தனது மகன் துரை வையாபுரியை அனுப்பிவைக்கிறார் வைகோ.

வாரிசு அரசியல் தனது கட்சியில் கிடையாது என்று வைகோ கூறியுள்ள போதும் துரை வையாபுரிக்கு மதிமுகவில் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கட்சிக்குள் தொடர்ந்து எழுப்பப்பட்டுதான் வருகிறது. இதுதொடர்பாக, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், துரை வையாபுரிக்காகத் தனது பதவியையும் விட்டுக் கொடுக்கத் தயார் என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இப்போது கட்சி சார்ந்த பல இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துரை வையாபுரி முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். மதிமுகவின் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் துரை வையாபுரியின் பெயரும் முளைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் இல்லங்களுக்கு துரை வையாபுரி சென்றுள்ளது மதிமுகவினரிடயே மற்றும் தமிழக   அரசியல் வட்டாரங்களிலும் கவனம் கொள்ள வைத்துள்ளது.

No comments