கருணாநிதி,சம்பந்தர் பாணியில் ரணிலும் கடிதம்?


தமிழ் நாட்டில் எதற்கெடுத்தாலும் மத்திய அரசிற்கு கடிதமெழுதி பெயரெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.அவருக்கு சற்றும் குறையாது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கடிதம் எழுதுவது வழமை.

இந்நிலையில் அவர்களிற்கு போட்டியாக தானும் கடிதமெழுத ரணிலும் தொடங்கியுள்ளார்.வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அரச இதழ் பிரசுரிக்கப்பட்ட 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீள மக்களிடமே வழங்க ஆவண செய்யுமாறு தனது அமைச்சரவையின் கீழுள்ள அமைச்சிற்கு ரணில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்கள் இ தொழில் மையங்கள் மத வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தையும் உள்ளடக்கி கடந்த ஆட்சியில் 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்திருந்தது.

இதனால் இப்பகுதியில் வாழ்ந்த பல ஆயிரம் குடும்பங்கள் இருப்பிடத்தையும் மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் தொழில் வாய்ப்பையும் இழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு பல கட்ட முயற்சியின் பெயரில் அப்பகுதியில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிக்க குறித்த திணைக்களம் இணக்கம் தெரிவித்தது. இருப்பினும் அது இன்றுவரை இடம்பெறவில்லை.

இவ்வாறு இணக்கம் தெரிவித்தே இரண்டு ஆண்டுகள் கடந்தபோதும் எந்த முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் சுமந்திரனின் கோரிக்கையின் பேரில்; ரணில் கடிதம் எழுதியிருக்கின்றார். 

தற்போது பிரதமர் செயலகத்தினால் குறித்த அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கி அதன் பிரதி மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

No comments