துணுக்காய் பிரதேச சபையும் சந்தையடி பிள்ளையாரும் - நிரஞ்சன் தங்கராஜா

மல்லாவி சந்தையடி பிள்ளையார் ஆலயத்திற்கு தனது ஆளுகையின் கீழுள்ள காணியை வழங்க மறுக்கும் துணுக்காய் பிரதேச சபை ஆலய வெளிவீதி பகுதியில் வாகன தரிப்பிடம் அமைக்க தயாராகி வருகிறது...  மேற்படி சந்தையடி அதிசய விநாயகர் ஆலயம் 2004 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது..   யுத்தம் முடிந்து மீளக்குடியமர்ந்த  பின்னரே அந்த இடம் சந்தை அமைந்திருப்பதால் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ்  கொண்டுவரப்பட்டது..

தற்போது பிரச்சனை என்னவென்றால் பிரதேச சபைக்குரிய காணி என கூறி ஆலய வெளி வீதி அமைந்துள்ள பகுதியில் சந்தைக்கென ஒரு வாகனத்தரிப்பிடத்தை அமைக்க துணுக்காய் பிரதேச சபை முயல்கிறது. கீழுள்ள படத்தை பார்த்தால் ஆலய மதிலோடு அந்த வாகன தரிப்பிடம் அமைய உள்ளது.

 பிரதேச சபை  தனக்குரிய காணியில் l வாகனத் தரிப்பிடம் கட்டுவது தவறல்ல.  அது இன்னொரு தரப்பை பாதிக்கின்றது என்றால் மக்களின் நலனை தான் பிரதேச சபை கருத்தில் கொள்ள வேண்டும்..

ஆலயத்துக்கு அந்த காணி தேவையாயின் அதனை ஆலயத்திற்கு வழங்குவது தான் ஆளுமையான ஒரு  பிரதேச சபை செய்ய வேண்டியது.. மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பது தான் மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்..

பிள்ளையார் கோவில் தேரோடும் வீதியில்  மக்களை பற்றி கரிசனை கொள்ளாமல் அவர்களுடைய வழிபாட்டு உரிமையை பறிக்கும் விதமாக செயற்படுவது ஒரு பிரதேச சபையின் நல்ல செயற்பாடாக அமையாது..  மக்கள் பிரதிநிதிகள் தான் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக உரிய தீர்வை வழங்க வேண்டும். இங்கே பிரதேச சபையே பிரச்சினையாக இருப்பது வேதனை..

சந்தையினுள் ஏற்கனவே ஒரு வாகனத்தரிப்பிடம் உள்ளது.  அது தற்போது  மரக்கறிகள் நிறை அளக்கும் இடமாகவும் தற்காலிக சேமிப்பு இடமாகவும் உள்ளது.   சந்தையின் தற்போது  பாவனையிலுள்ள பிரதான வாயிலை விடுத்து கோவிலுக்கு அருகாமையால்  ஆலய செயற்பாடுகளுக்கு இடஞ்சலாக ஒரு பிரதான வீதியை அமைக்க வேண்டிய தேவை ஏன் என்பது தான் தற்போது எழும் கேள்வி.

பிரதான வாயிலை புதிய இடத்தில் அமைத்தாலும் பழைய வாயிலை மூட முடியாது. ஏனென்றால் மரக்கறி வாகனங்கள் சென்று வரவும் மீன் சந்தைக்கு செல்லவும்  பழைய வாயில் தான் கட்டாயம் தேவையானது. எனவே பழைய வாயிலையும் பழைய வாகனத் தரிப்பிடத்தையும் திருத்துவதை விடுத்து புதிய தரிப்பிடத்தையும் புதிய வாயிலையும் அமைப்பது நல்லதல்ல. புதிய வாயிலை அமைப்பதானால் அருகிலுள்ள பெட்டி கடைகளை இடமாற்றி விட்டு அந்த இடத்தில் தான் அமைக்க வேண்டும்...  பெட்டி கடைகளுக்கு சந்தை கட்டிடத்தினுள் கடைகளை வழங்க முடியும். அதை விடுத்து ஆலயத்துக்கு பயன்படுத்தப்பட கூடிய  காணியில்  வேண்டுமென்றே ஒரு வாகனத் தரிப்பிடத்தை அமைப்பது அழகல்ல.

சந்தையினுடைய மலசல கூடத்தினை கூட ஆலயத்தின் வெளி வீதிப்ப பகுதியில் அமைத்துள்ளனர்.  உண்மையில் இது ஒரு மனித நாகரீகமற்ற செயற்பாடகும். காணி பிரதேச சபைக்கு சொந்தமானது என்பதகாக புனிதப்பகுதியாக பேணவேண்டிய ஆலய சூழலில் வேண்டத்தகாத செயற்பாடுகளை செய்து மக்களின் மனதை புண் படுத்துவது ஒரு பிரதேச சபையின் அதிகார துஸ்பிரயோகமே அன்றி ஆரோக்கியமான செயற்பாடல்ல.

அதைவிட சந்தையை தவிர்த்து  வெளியில் மல்லாவி பிரதான வீதியில் மூன்று பெரிய  மரக்கறி கடைகளை போட பிரதேச சபை அனுமதி அளித்துள்ளமையால் சந்தைக்கு வரும் மக்கள் தொகையும் வெகுவாக குறைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது...

இன்னுமொரு விடயமும் உள்ளது.  மல்லாவி வணிகர் மன்றத்தின் பயன்பட்டில் இருந்த கடையை வணிகர் மன்றத்திடம் இருந்து பறித்து அது பிரதேச சபைக்குரிய கட்டிடம் தரமுடியாது என்று கூறியுள்ளார்கள். மல்லாவி வணிகர்களின் பயன்பாட்டுக்கென்று ஒரு கட்டிடத்தை வழங்க மறுக்கும் பிரதேச சபையை எங்காவது கண்டிருப்பீர்களா??

மக்களுக்காக சேவையாற்ற வேண்டிய பிரதேச சபை மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாது மக்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காது தான் தோன்றித்தனமாக செயற்படுவது  பிரதேச சபையின் மீது மக்களுக்கு பிழையான அபிப்பிராயத்தையே ஏற்படுத்தும்...

No comments