ஞானசார தேரர் வெறும் முகமூடியே - ரெலோ அறிக்கை


ஞானசார தேரரின் இனவாத கருத்துக்கள் தமிழ் மக்களை பயமுறுத்தாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார்  ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறிகாந்தா.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கை சிங்கள பௌத்த நாடு. இதனை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். ஏற்றுக் கொள்ளாதவர்கள் தங்கள் உடமைகளுடன் தாரளமாக வேறு நாடுகளுக்கு செல்லலாம் என ஞானசார தேரர் கூறியிருக்கிறார்.

தேரோவின் பச்சையான இனவாத கருத்துக்கள் ஆச்சரியமானவை அல்ல.  அவரிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் எமது கேள்வியெல்லாம், குடியகல்வு அதிகாரங்கள் எப்போது, எந்த சட்டங்களின் கீழ் கொடுக்கப்பட்டது என்பதுதான்.

ஞானசார தேரோ வெறும் முகமூடிதான். அந்த முகமூடியின் பின்னால் வலிமையான இனவெறி சக்திகள் ஒளிந்து நின்று செயற்பட்டு வருகின்றன என்பதை நாமறிவோம்.

ஞானசார தேரோ இவ்விதம் இனவெறி கூச்சல்களை எழுப்பிக் கொண்டிருப்பதையிட்டு, அவருக்கு பொதுமன்னிப்பளித்தவரும், பொலிஸ்துறைக்கு பொறுப்பான பாதுகாப்பு அமைச்சை நிர்வகித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி என்ன சொல்லப் போகிறார்?

அதைவி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை முன்வந்துள்ள மூன்று பிரதான வேட்பாளர்களும் என்ன சொல்ல போகிறார்கள்?. ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள்- ஏன் முஸ்லிம் மக்கள் கூட- ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்கு, இவர்களின் பதில்கள் கட்டாயமானவை.

அதேநேரத்தில் தமிழ் மக்களிற்கு, அவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் என்னவென்பது நன்றாக தெரியும். ஐம்பதுகளின் நடுப்பகுதியில் ஆரம்பித்து, கே.எம்.பி.ராஜரத்ன, எவ்.ஆர்.ஜயசூரிய, எச்.எல்.மேத்தானந்த, ஆர்.ஜிசேனநாயக்க, சிறில் மத்யூ போன்றோரின் பேரினவாத கர்ச்சனைகளை நேரில் கண்டவர்கள். அதன் தொடர் விளைவுகள் என்னவென்பதையும் மறக்காதவர்கள்.

ஞானசார தேரோவின் இனவாத கூச்சல்களையிட்டு  தமிழர்கள் ஒரு போதும் மிரள மாட்டார்கள். அவரின் பயமுறுத்தல்கள் அவர்களை எதுவும் செய்து விடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments