முறைகேடான வகையில் வடமாகாண சுகாதாரத் தொண்டர்களை உள்வாங்கிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்!


கடந்தகால யுத்தத்தால் எமது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் மேலும் அநீதிகள் இழைக்கப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, முறைகேடான வகையில் வடமாகாண சுகாதாரத் தொண்டர்களை உள்ளீர்ப்பதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். நீண்டகாலம் சேவையாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் வடமாகாண ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த- 15 வருடகாலமாகவும், அதற்கு மேலதிகமாகவும் வடமாகாண சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி வருபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காத நிலையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றாத பலரும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கான பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வடமாகாண சுகாதாரத் தொண்டர் நியமன விடயத்தில் ஊழல் மோசடி நடந்துள்ளமை புலனாகிறது. 

இந்நிலையில் தம்மையும் உள்ளீர்க்காமல் நியமனம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பாதிக்கப்பட்ட வடமாகாண
சுகாதாரத் தொண்டர்கள் நேற்றைய தினம் கைதடியிலுள்ள வடமாகாணசபை அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தாம் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்கள் தொடர்பாகத் தெரியப்படுத்தினர். இதனையடுத்துப் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் அனைவருக்கும் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி உடனடியாகவே ஜனாதிபதிக்கு பக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியிருந்தோம். 

எவ்வாறாயினும் இன்றைய தினம் சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தான் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் சாவகச்சேரி நகரசபையை முற்றுகையிட்டு இன்று காலை முதல் முற்றுகையிட்டுப் போராட்டமொன்றை நடாத்தினர். அமைதிவழியில் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் போராடிய நிலையில் பொலிஸார் போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற முற்பட்டனர். 

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரின் மார்பைத் தம் கைகளால் ஆண் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தள்ளித் தடுத்து நிறுத்தினார். உண்மையில் இந்த விடயம் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததொரு விடயம். போராட்டத்தில் பங்கேற்ற பெண்களைப் பெண் பொலிஸாரே கையாண்டிருக்க வேண்டும். இதனை மீறும் வகையில் அத்துமீறிச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். 

பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற சுகாதாரத் தொண்டர்கள் சிலர் பெற்றோல், மண்ணெண்ணையைத் தமது உடல்களில் ஊற்றித் தற்கொலை 
செய்வதற்கு முயற்சித்தார்கள். நாங்கள் மிகவும் சிரமப்பட்டே இவ்வாறான முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டியேற்பட்டது. 

வடமாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் இந்த விடயத்தில் ஏன் மெளனம் சாதிக்கின்றார்? என்பது எனக்குப் புரியாத புதிராகவேயுள்ளது. நேற்று இரவிரவாக கடும் குளிருக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் வடக்கு மாகாண சபைக்கு முன்பாகப் போராடிய போதும் அவர்களை வடக்கு மாகாண ஆளுனர் கண்டுகொள்ளாமல் செயற்பட்டமை கவலையளிக்கிறது. 

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ரெஜினோல்ட் குரே தற்போது வடக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்திருந்தால் நாங்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவசியமில்லை என எம்மிடம் தெரிவித்திருந்தார். 

இன்றைய தினம் பாதிக்கப்பட்ட வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் பிரதிநிதிகள் சிலர் வடமாகாண ஆளுனரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அப்போது நியமன விடயத்தில் முறைகேடுகள் நடந்துள்ளமையை வடமாகாண ஆளுனர் ஒப்புக் கொண்டுள்ளமையையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

No comments