ஒன்றுக்கு பிணை, இன்னொன்றுக்கு திகார் சிறை!

ஐ.என்.எக்ஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது ரோஸ் அவென்யூ சிறப்பு நீதின்றம்.
இந்த உத்தரவின்படி 74 வயதாகும் சிதம்பரம், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை சிறையில் வைத்து விசாரிக்கப்படுவார். முன்னதாக சிபிஐ அமைப்பு, சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தது. அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு வந்ததைத் தொடர்ந்து சிதம்பரத் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், அவருக்குத் தனிச் சிறை, படுக்கை, மேற்கத்திய முறையில் அமைந்த கழிவறை மற்றும் மருந்துகள் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
முன்னதாக நீதிமன்றக் காவல் கோரப்பட்டதற்கு, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தார். அவர், அமலாக்கத் துறை கைதுக்கு சிதம்பரம் தயார் என்றும் சிறையில் அடைக்கப்படக் கூடாது என்றும் வாதிட்டார்.
“அமலாக்கத் துறைக்கு வேண்டுமென்றால் நான் அவர்களின் கஸ்டடிக்கு செல்லத் தயார். ஆனால் நீதிமன்றக் காவலுக்கான அவசியம் என்ன இருக்கிறது. நான் சரணடைகிறேன். அல்லது, அமலாக்கத் துறை என்னைக் கைது செய்யட்டும். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று வழக்கு விசாரணையின்போது சிதம்பரம் கூறினார்.
ஆனால் சிபிஐ தரப்போ, “குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர், மிகவும் சக்திவாய்ந்தவர் ஆவார். எனவே, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட வேண்டும்.” என்று பதிலடி கொடுத்தது.
கடந்த 15 நாட்களாக சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில்தான் இருந்தார். அவர் டெல்லியில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள அறையில்தான் தங்கியிருந்தார்.
ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய் கிழமை, சிதம்பரத்தின் சிபிஐ கஸ்டடியை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இன்று அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கொடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 'பொருளாதார குற்ற விவகாரங்களில் மிக அரிதாகத்தான் முன் பிணை  வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கில் உள்ள சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை பார்க்கும்போது முன் பிணை வழங்க தகுதியான வழக்கு இது அல்ல' என்று தெரிவித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் ஏர்செல் மேக்சிஸ் வழகில் ப.சிதம்பரத்துக்கு முன் பிணை  கிடைத்துள்ளது.

No comments