மலரட்டும் தமிழீழம்: மெய்க்கட்டும் மாவீரர் கனவுகள்!


குழிபறிப்புக்கள்,இழுத்து வீழ்த்தல்கள் மற்றும் பின்புற பேரங்களின் மத்தியில் மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகம் வீழ்ந்துவிடாத தாகத்துடன் எழுக தமிழ் பேரணியில் இணைந்துள்ளது.

தமிழ் மக்களது ஆறு அம்சக்கோரிக்கைகளுடன் மலரட்டும் தமிழீழம் மெய்க்கட்டும் மாவீரர் கனவுகள் கோசமும் ஓங்கியொலிக்க எழுக தமிழ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக முற்றவெளியில் பிரகடனத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே எழுக தமிழிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களும் முடங்கி போயின.போக்குவரத்தும் முற்றாக முடங்கியது.வர்த்தக நிலையங்கள்,பொது சந்தைகள் முடங்கின.அரச அலுவலங்கள் முடங்கிப்போயின.கதவடைப்பு போராட்டம் காலை முதல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று  யாழ்ப்பாணத்தில் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டதுடன், போக்குவரத்தும் முடங்கியது.

யாழின் பிரதான சந்தைகள் எவையும் இன்று திறக்கப்படவில்லை என்பதோடு, யாழ்ப்பாணத்திற்கான பிரதான காய்கறி விநியோக சந்தைகளான மருதனார்மடம், திருநெல்வேலி சந்தைகளும் பூட்டப்பட்டன.

மேலும் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை .

முதலில் 9மணிக்கு பேரணி ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்ட போதும் மக்களது வருகை குறைவாகவே இருந்தது.

எனினும் ஆயிரத்திற்கும் குறைவானோருடன் புறப்பட்ட பேரணியில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை முதல் வடக்கின் அனைத்து மாவட்ட மக்களும் அணிதிரள இறுதியில் பேரணியில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்திருந்தனர்.

பருத்தித்துறை வீதி,அரசடி வீதி,பலாலி வீதி,நாவலர் வீதி,கஸ்தூரியார்வீதியினூடாக முற்றவெளியினை பேரணியினை சென்றடைந்திருந்தது.

எழுக தமிழ் பிரகடனத்தை இணைத்தலைவர் வைத்தியகலாநிதி லக்ஸ்மன் மக்கள் முன்வைத்திருந்தார்.

பேரணிக்கப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் முற்றவெளியினில் மைதானத்தில் குவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments