இணுவில் கொள்ளை; இராணுவ வீரர் கைது

சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இராணுவத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சுன்னாகம் காவற்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்.இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து கறுப்பு துணிகளால் கட்டி , கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்த ஐந்து பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் இருந்த மடிக்கணி , கைத்தொலைபேசிகள் நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டு உரிமையாளரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர்  அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையிலும் ,  இரகசிய தகவலின் அடிப்படையிலும் புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றும் நபர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து காவற்துறையினர்  கைது செய்தனர். அத்துடன் அவரது வீட்டில் காவற்துறையினர்  மேற்கொண்ட தேடுதலின் போது , இணுவில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மடிக்கணியை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை சுன்னாக காவற்துறைநிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவற்துறையினர்  கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்.

அதேவேளை அவர்களின் வீடுகளில் நடப்பட்ட சோதனைகளின் போது ஒருவரின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு தொகை மீட்கப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவற்துறையினர்  முன்னெடுத்துள்ளனர்.

No comments