விஷாலுக்கு சிறையிலிருந்து வெளியில் வராதபடி பிடியாணை!

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு நபர்களுக்கு வழங்கிய தொகைக்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிடிஎஸ் தொகையை வருமானவரித் துறைக்கு குறித்த காலத்துக்குள் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை பலமுறை நடிகர் விஷாலுக்கு தெரியப்படுத்தி இருந்தும் அவர் அதற்க்கான  பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், டி.டி.எஸ் தொகையை செலுத்தாத நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி, இது தொடர்பாக விஷால், இன்று நேரில் வந்து விளக்கம் அளிக்க விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் நடிகர் விஷால் இன்று விசாரணைக்கு வரவில்லை . வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியும், நடிகர் விஷால் வருமான வரித்துறை விசாரணைக்கு வருகை தராததால் , அவருக்கு எதிராக வெளிவர முடியாத வகையில் பிடியாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments