கொழும்பில் பூனை - எலி விளையாட்டு சஜித்தை முடக்க ரணில் புது வியூகம்! - பனங்காட்டான்


தமிழர் தாயகத்தில் தங்கள் தலைவர்களைப் பின்தள்ளிவிட்டு போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்துகின்றனர். தெற்கில் தங்கள் மக்களைப் பின்தள்ளிவிட்டு அரசியல் தலைவர்கள் மோதுகின்றனர்
அபேட்சகர் பதவிக்கு. தனக்குப் போட்டியாக நிற்கும் சஜித் பிரேமதாசவை ஓரங்கட்ட சபாநாயகர் ஜெயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்புகிறார் ரணில். அப்படியென்றால் பிரதமர் பதவி ரணிலுக்கே. ஒரு கல்லில் ஒரு குலை மாங்காய்கள். 

பிரித்தானியரிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரத்தை சிங்களவர் தமதாக்கிக் கொண்டுஇ அதன் சுகபோகங்களை தங்களுக்கு மட்டுமே என நினைத்து அனுபவிக்கத் தொடங்கி எழுபத்தியிரண்டு ஆண்டுகளாகிவிட்டது.

மறுதரப்பில்இ இலங்கைத் தமிழர்கள் சிங்கள ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துஇ தங்களுக்குச் சுயாட்சியை விரும்பிப் போராட ஆரம்பித்து ஆறு தசாப்தங்கள் முடிந்துவிட்டது.

இதன் முதல் முப்பதாண்டு காலமானது சாத்வீகப் போராட்டத்துக்கானது. உண்ணாவிரதம்இ சத்தியாக்கிரகம் என்பவை கொழும்பு காலிமுகத் திடலில் ஆரம்பமாகிஇ பின்னர் படிப்படியாக தமிழர் தாயகத்துக்கு மாறி அப்படியே முடங்கிப் போயின.

அடுத்த முப்பதாண்டு காலம் ஆயுதங்களை ஆயுதங்களால் சந்திக்க நேரிட்ட களம். சிங்கள பௌத்த எதேச்சாதிகார அரசாங்கங்களின் ஏவல் படைகள் ஆயுத முனையில் தமிழர்களை அழித்தொழிக்க முனைந்த வேளையில் அதனை ஆயுதங்களாலேயே சந்திக்க நேர்ந்தது காலத்தின் கட்டாயமாயிற்று.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலானதுஇ பயங்கரவாதத்துக்கும் விடுதலைப் போராட்டத்துக்குமிடையிலான தடித்த கோட்டை இல்லாமல் செய்ததுஇ இலங்கை அரசு தமிழரை இனப்படுகொலை செய்ய வாய்ப்பளித்தது.

வாய் கிழிய ஜனநாயகம் பேசும் நாடுகள் வசதி கருதியும்இ வருவாய் கருதியும் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வாரி வழங்கிஇ மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வெளிநாட்டு உதவிகள் எதுவுமின்றிப் போராடிய ஓர் இனத்தின் தலைமையை மூழ்கடித்தன.

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபோது ஒன்றரை லட்சம் வரையான மக்கள் அடையாளமற்ற வகையில் கொன்று புதைக்கப்பட்டனர். காணமலாக்கப்பட்டோர் இன்னொரு தொகையினர்.

இவற்றுக்குப் பிறகுஇ தாயக மண்ணில் மற்றொரு போராட்டம் ஆரம்பமானது. இது முன்னெப்போதும் இடம்பெறாதது. காணாமலாக்கப்பட்டோர்இ அரசியல் கைதிகளாக்கப்பட்டோர்இ வீடு வாசல் காணிகள் தோட்டங்களை இழந்தோரின் குடும்பங்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டமிது.

இதிலுள்ள குறிப்பிடத்தக்கவொரு முக்கிய விடயம்இ தங்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை ஓரம் தள்ளிவிட்டு மக்கள் தலைமையேற்று நடத்தும் போராட்டம் இது.

இப்போராட்டம் வெற்றி பெறுமாஇ இல்லையா என்பதல்ல இங்குள்ள கேள்வி. தங்களால் இதனை தனித்து நின்று முன்னெடுக்க முடியுமென்பதை தங்கள் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டிஇ பாடம் புகட்டும் போராட்டம்.

இதனால் தங்களுக்கு வாக்களித்த மக்கள் நடத்தும் போராட்டங்களில் பங்குபற்றவும் அவர்களைச் சந்திக்கவும் அந்தத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சில வாரங்களுக்கு முன்னர் மாநாடு நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினர்இ மண்டப வாசலில் கூடி நின்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததையும்இ அவர்களைச் சந்திக்க மறுத்ததையும் - ஒரு பானை சோற்றுக்கான பதமாகப் பார்க்கலாம்.

தெற்கில் நடைபெறுவது தமிழர் தாயகப் போராட்டத்துக்கு வித்தியாசமானது. அங்கு அரசியல் தலைமைகள் தங்களுக்குள் நித்தம் நித்தம் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை தேர்தல் காலத்தில் தெரிவு செய்த மக்கள் வெறும் பார்வையாளர்களாகவுள்ளனர்.

அரசியல் ரீதியாகவோஇ நிலப்பங்கீடு ரீதியாகவோ பிளவு இல்லாமலேஇ அந்தத் தீவு இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதென்பதை இவ்விருவகைப் போராட்டங்க;டாகவும் பார்க்க முடிகிறது.

இப்போது தெற்கின் மையப் பேசுபொருளாகவிருப்பது அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எப்போதுஇ யார் யார் எந்தெந்த கட்சியில் போட்டியிடவுள்ளனர்இ அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்குண்டு என்பவையே.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு இன்னொரு தடவை அப்பதவிக்குப் போட்டியிட அரசியலமைப்பு ரீதியாக முடியுமாயினும்இ அரசியல் செல்வாக்கு ரீதியாக அது இல்லை. அப்படியான ஒரு நிலைமையை அவரே தமக்கு ஏற்படுத்திக் கொண்டார்.

கூடி வந்தவரும் (ரணில்) இல்லைஇ முன்னர் கூடியிருந்தவரும் (மகிந்த) இப்போது இல்லையென்பதே இவருடைய பரிதாபத்துக்குரிய நிலை.

பொதுஜன பெரமுன என்ற மொட்டுக் கட்சியின் வாயிலாக ஆட்சியைக் கைப்பற்ற முனையும் மகிந்தவுக்கு சோதிடக்காரர்களைத் தவிர வேறு யார் மீதும் நம்பிக்கையில்லை. ஒரு சகோதரர் கோதபாய ஜனாதிபதியானால் தமது மகனுக்கு இடமில்லாது போகும் என்ற பயம் முதலாவது. மற்றைய சகோதரர் பசிலுக்கு இடம்கொடுக்க மனைவி சிரானிக்கு சம்மதமில்லை. ஆனாலும்இ இந்த மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளரை அவர் அறிவித்தேயாக வேண்டும்.

அடுத்திருப்பதுஇ ஐக்கிய தேசிய கட்சி. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு சிம்ம சொப்பனமாக ஆர். பிரேமதாச இருந்ததுபோலஇ ஜே.ஆரின் பெறாமகன் ரணிலுக்கு பிரேமதாசவின் மகன் சஜித் கனவுக் காட்சியாகியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இதுவரை ரணில் வைத்ததே சட்டம். சில வருடங்களுக்கு முன்னர் அவரை எதிர்த்த கரு ஜெயசூரியஇ அவரின் மகளின் கணவனும் காமினி திசநாயக்காவின் மகனுமான நவின் திசநாயக்க போன்றோர் கட்சியிலிருந்து வெளியேறி சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்ததும்இ பின்னர் திரும்பி வந்ததும் ரணிலின் சாமர்த்தியம்.

ஏற்கனவே சில தடவை சஜித் பிரேமதாசகூட ரணிலுடன் மோதிவிட்டு பின்னர் அடிபணிந்தவரே. இப்போது ரணிலின் நெருங்கிய சகாக்களை தம்பக்கமாக்கிஇ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்வர முனைகிறார் சஜித்.

இதனைப் புரிந்து கொண்ட ரணில் பலவேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகிறார். இதிலொன்றுஇ வேறு கட்சிகளையும் இணைத்து ஐக்கிய ஜனநாயக முன்னணியை இந்த மாதம் 5ஆம் திகதி உருவாக்கி அதற்கூடாக வேட்பாளரை அறிவிப்பதென்பது ரணிலின் திட்டம்.

ரணிலா சஜித்தா கட்சியின் வேட்பாளர் என்ற எலி - பூனை விளையாட்டுக்குள் ஒரு யானையாக கரு ஜெயசூரிய இறக்கப்பட்டுள்ளார். இதனை நடத்தியவர் வேறு யாருமல்ல - ரணிலேதான்.

ஐம்பத்தொரு நாட்கள் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து இறக்கி மகிந்தவை மைத்திரி பிரதமராக்கியபோதிலும் அதனைத் தொடர முடியாத நிலையேற்பட்டது. இதற்கு ஒரு காரணம் சபாநாயகரான கரு ஜெயசூரிய நிலைமாறாது அரசியல் நடைமுறைகளைக் கடைப்பிடித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையின்போதும் ஜனாதிபதியின் உத்தரவுகளை நிராகரித்த கரு ஜெயசூரியஇ நாடாளுமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனநாயக விழுமியங்களை சுத்தமாக நிறைவேற்றியவர்.

இவைகளால் ரணிலுக்கு கரு ஜெயசூரிய மீது அதீத நம்பிக்கையுண்டு. அதனையே ஓர் ஆயுதமாக்கி சஜித்தை வீழ்த்த முனைந்துள்ளார் ரணில்.

2015 ஜனவரியில் நடைபெற்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறியே மைத்திரி வெற்றி பெற்றார். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை.

இருப்பினும்இ பத்தொன்பதாவது அரசியல் திருத்தத்தின் வழியாக மைத்திரி கண்டுபிடிக்க முடியாதவகையிலும் அதனைப் புரிந்து கொள்ள முடியாதவாறும் ஜனாதிபதியின் பல அதிகாரங்களை ரணில் நீக்கிவிட்டார். அந்தத் தாக்கங்களை அவர் உணர ஆரம்பிக்கையில் ஜனாதிபதித் தேர்தல் வந்துவிட்டது.

இப்போது பந்து ரணிலின் பக்கம். இவருக்குச் சவாலாக இருப்பவர் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச. தமது தந்தை முன்னர் ஜனாதிபதியாகவிருந்தவர் என்ற அடையாளத்தை கையில் ஏந்தியவாறு இவர் முன்னால் வந்துள்ளார்.

சஜித்தை மெதுவாக வெட்டி வீழ்த்துவது ரணிலுக்கு இலகுவாக இருக்காது என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் உள்ளது. ஆனால்இ அதற்கும் ஒரு வழியை ரணில் கண்டுபிடித்துவிட்டார் போலத் தெரிகிறது.

அதுவே கரு ஜெயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது. இவர் ஜனாதிபதியானதும் முதற்பணியாக ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்களை இல்லாமற் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வாரென ரணில் பூரணமாக நம்புகிறார். அவ்வேளையில் சகல அதிகாரங்களும் பிரதமரின் கைகளுக்கு மாறும்.

கரு ஜெயசூரிய பிரதமரானால்இ பிரதமர் பதவி ரணிலுக்குத்தான். அதில் சஜித் உரிமைகோர முடியாது. ஆகஇ மொத்தத்தில் ஒரு கல்லில் ஒரு குலை மாங்காய்.

அப்படியென்றால்இ ஜனாதிபதியாகாமலே ரணில் முடிசூடும் மன்னராகிவிடுவார். ரணிலுக்குப் பின்னரே தமக்குரிய இடமென்று சஜித் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

தற்செயலாக ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜெயசூரிய தோல்வியடைந்தால்....!

No comments