ஜனாதிபதித் தேர்தலில் புது வியூகம் வகுப்போம் என்கிறார் வேலு

இலங்கையில் அடக்குமுறை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டிய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அடுத்து வரும் தேர்தல்களிலும் நிச்சயம் வெற்றிபெறும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

எனவே, இவ்வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள தயாராகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 10 வருடங்களாக இந்த நாட்டை ஆண்ட மஹிந்தவும், அவரின் சகாக்களும் இலங்கையில் கொடுங்கோல் ஆட்சியை சட்டரீதியில் நிலைநாட்ட முயற்சித்தனர். 18 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

மறுபுறத்தில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டன. நீதிக்காக போராடும் மக்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி ஒடுக்கப்பட்டனர். இதனால் சர்வதேச சமூகமும் இலங்கை மீது கடும் நடவடிக்கையில் இறங்குவதற்கு தயாராகியது.

இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் முடிவை மஹிந்த எடுத்தார். போர் வெற்றியைக் காட்டியும், இனவாதத்தைக்கக்கியும் இலகுவில் வென்று விடலாம் என கனவு கண்டனர். ஆனால், ஆபத்தை உணர்ந்த மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தனர்.

இறுதியில் மஹிந்தவின் சர்வாதிகார சாம்ராஜ்ஜியம் சரிந்தது. நல்லாட்சி மலர்ந்தது. இதனையடுத்து உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த ஜனநாயகத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. மிகவும் நேர்த்தியான முறையில் அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

ஜனநாயக ரீதியில் ஏற்றப்பட்டுள்ள மாற்றங்கள் மக்களின் விழிகளுக்கு புலப்படாதபோதிலும் அவற்றின் பயன்களை தினந்தோறும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். என்றார்.

No comments