முற்றியது வருத்தம்:பிக்குவிற்கு எச்சரிக்கை?


மனநலம் பாதிக்கப்பட்ட பௌத்த மதகுருவே முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் முரண்பாடுகளை தோற்றுவித்திருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீட்டு மற்றும் மீளாய்வு மனுக்கள் நேற்று (திங்கட்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
முதலில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கினுடைய தயார்ப்படுத்தப்பட்ட பிரதி சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்டதையடுத்து, எழுத்துமூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்கொடிகள் பௌத்த மதகுருவால் பிடுங்கி எறியப்பட்டிருந்த விவகாரம் தொடர்பான மீளாய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பௌத்த மதகுரு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
மேலும் மனநோய் முற்றிய நிலையிலேயே மதகுரு அவ்வாறு நடந்துகொண்டதாக, நீதிமன்றத்தில் தெரிவித்த சட்டத்தரணி, மனநோயால் பீடிக்கப்பட்டார் என்பதற்கான மருத்துவ சான்றிதழ்களையும், சமர்ப்பித்தார்.
இதனை ஆராய்ந்த நீதிமன்றம், எது எவ்வாறாயினும் நீதிமன்றத்தின் கட்டளையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
அத்தோடு, குறித்த வழக்கினுடைய எழுத்துமூல சமர்ப்பணத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

No comments