சட்டமா அதிபர் திணைக்களம் இராணுவபுலனாய்வு பிரிவிடம்?


சட்டத்தணிகளை புகைப்படமெடுத்த இராணுவ புலனாய்வாளர்கள் சட்டமா அதிபர் திணைக்கள வாகனத்தில் தப்பித்தமை கடும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியின் தலைமையில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் சார்பில் ஆட்கொணர்வு மனு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான கலாநிதி கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து புலனாய்வு பிரிவினர் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.
அதனை அவதானித்த சட்டத்தரணிகள் ஒளிப்படம் எடுத்தவர்களை அங்கிருந்தவர்களின் உதவியுடன் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை , மேலதிக மன்றாடியார் அதிபதி சொய்த்திய குணசேகர பயணித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனராம்.
அதேவேளை கடந்த வருடம் குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளை புகைப்படம் பிடித்தும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் நடந்து கொண்டனர். அது தொடர்பில் நீதிபதியின் கவனத்திற்கு சட்டத்தரணிகள் கொண்டு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய வேண்டும். என கோரி நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் வழக்கு தொடரப்பட்டு உள்ளமை உள்ளிட்ட காரணங்களை முன் வைத்தார்.மேலதிக மன்றாடியார் அதிபதி.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளே யாழ்.மேல் நீதிமன்றில் ஒன்றரை வருடங்களுக்கு மேல் நடைபெற்றன. அந்நிலையில் அண்மையில் குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று முன்னெடுக்க யாழ்.மேல் நீதிமன்று கட்டளையிட்டது.
அதேவேளை குறித்த வழக்கினை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைத் தள்ளுபடி செய்யக் கோரும் சட்ட மா அதிபரின் மேன்முறையீட்டு சிறப்பு அனுமதி மனுவை இடைக்காலக் கட்டளையின்றி உயர் நீதிமன்றம். கடந்த செவ்வாய்க்கிழமை ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments