காவிரிப்படுகையைப் வேளாண்மண்டலமாக அறிவிக்கவேண்டும்; மயிலாடுதுறையில் மாநாடு

காவிரிப்படுகையைப் வேளாண்மண்டலமாக அறிவிக்கவேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் இயற்கை வளம் – கனிமவளப் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் நேற்று 18 ஆகஸ்ட் 2019 மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு பேராசிரியர் த.செயராமன்ஒருங்கிணைப்பில் மயிலாடுதுறையில் மாநாடு ஒன்று  நடைபெற்றது இதில் அமமுக தலைவர் தினகரன் , தமிழக வாழ்வுரிமைகட்சி தலைவர் வேல்முருகன் , தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன், குடந்தை அரசன் , சுப.உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. தமிழர்களின் தொன்மை நாகரிகம் மலர்ந்த காவிரிப்படுகை பாரம்பரிய வேளாண் மண்டலம் மற்றும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். காவிரிப்படுகையில் வேளாண்மைத் தொடரும் வரைதான் தமிழகத்துக்கு உணவுப் பாதுகாப்பும், தற்சார்பும் நிலைக்கும்.  எனவே, காவிரிப்படுகையின் உழவுச் சூழலையும், உயிர்கள் வாழும் சூழலையும் காக்கும் வகையில் காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்று தமிழக அரசு அறிவிக்க இம்மாநாடு கோருகிறது.

2. 2019- ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அனைத்துக் கட்சிகளும் காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிப்பதாக குறிப்பிட்டிருந்தன.  இது, தமிழக மக்களுக்குத் தேர்தல் கட்சிகள் அளித்த உறுதிமொழியாகும்.  எனவே, காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்று அறிவிக்கும் வகையில், அனைத்துக் கட்சி, சட்டமன்ற உறுப்பினர்களும் கூடி இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதுடன் சிறப்புச் சட்டமியற்ற இம்மாநாடு கோருகிறது.

3. உலகம் முழுவதும் இயற்கை வளங்கள் மீது அந்தந்த தேசிய இனங்களின் மாறாத இறையாண்மை (Permanent Soverignity of Nations over their Natural Resources) என்ற ஐ.நா. அவையால் ஏற்கப்பட்ட, பிரகடனத்தின்படியும், உலக நாடுகளின் ஏற்பளிப்பு மற்றும் நடைமுறைகளின்படியும், தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் கனிமவளங்கள் தமிழகத்திற்கே சொந்தம்.  அதனை இந்திய அரசு பெருமுதலாளிய நிறுவனங்களுடன் ஓப்பந்தமிட்டு, உரிமம் அளித்து, கனிமச் சூறைக்கு அனுமதி அளிக்க முடியாது.  தமிழக அரசு தமிழ்மக்களின் காப்பாளர் என்ற முறையில் தமிழகக் கனிம வளங்களைக் காக்கவும், கையாளவும் உரிமை பெற வேண்டும். தமிழகத்தின் கனிம இறையாண்மையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

4. ஓ.என்.ஜி.சி. மற்றும் தனியார் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களை தமிழகத்திலிருந்து வெளியேற்றுவதுடன், இதுகாறும் எடுத்துவந்த கனிம மதிப்பை கணக்கிட்டு 80 விழுக்காட்டை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.  மேலும் தொடங்கப்பட்டுள்ள கனிம எடுப்புத் தகவமைப்புகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5. எண்ணெய் எரிவாயு திட்டங்களின் பேராபத்தை உணர்நது நாகாலந்து சட்டமன்றம் அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவனங்களை வெளியேற்றியதை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழகத்திலும் குறிப்பாக காவிரிப்படுகையை பாதுகாக்கும் வகையில் எண்ணெய் எரிவாயுத் திட்டத்தை அனுமதிப்பதில்லை என்று கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.

6. விளை நிலத்தில் அத்துமீறி எரிவாயுக் குழாய்ப் பதிக்கும் நிறுவனங்களுக்கும் அவர்களுடைய முகவர்களுக்கும் சட்டப் பாதுகாப்பு தரும் பெட்ரோலியம் மற்றும் மினரல் குழாய்கள் நிலப்பயன்பாட்டு உரிமை பெறுதல் சட்டம் 1962 திருத்தப்பட வேண்டும். இச்சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும்  2011 இல் சட்டம் திருத்தப்பட்டு, குழாய் சேதமுற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை நில உடைமையாளருக்கு வழங்க வழி செய்வது கூடுதல் கொடுமையாகும்.  மத்திய அரசு தமிழகத்தில் தன் குழாய்ப் பதிப்பு அறிவிப்புகளைத் திரும்பப் பெற இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7. ஒரு மாநிலம் விரும்பாவிட்டால் அல்லது இந்திய அரசியல் சட்டம் ஊர் மன்றங்களுக்கு அளித்துள்ள பஞ்சாயத்துராஜ் அதிகாரத்தை மதிக்கும் வகையில், ஓர் ஊரின் கிராமசபை ஏற்காவிடில், அவ்வூரில் பெட்ரோலியக் குழாய் பதிப்பும், பேரழிவுத் திட்டங்களும் கைவிடப்படும் வகையில், 1962-ஆம் ஆண்டின் PMP சட்டத்தில் திருத்தங்கள் செய்ய இம்மாநாடு கோருகிறது.  விளைநிலங்கள் வழி எரிவாயுக் குழாய்கள் அமைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. தமிழகம் நேரடியாக உலக வங்கியில் கடன்பெற வழிவகை செய்தது போல, தமிழகம் நேரடியாக எண்ணெய் உற்பத்தி நாடுகளிலிருந்து எண்ணெய் எரிவாயுவை நேரடியாக இறக்குமதி செய்து கொள்ளும் உரிமையைத் தமிழக அரசு பெற்றுக் கொள்ள இம்மாநாடு கோருகிறது.  எரிபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெருமுதலாளிய கார்ப்பரேட்களிடம் உள்ளது.  இந்திய அரசு இறக்குமதி செய்து 28 விழுக்காடு வரி விதித்து அதற்குபிறகு இந்திய அரசிடமிருந்து எரிபொருட்களை தமிழக அரசு வாங்கி மீண்டும் வரிவதித்து விற்ப்பதால் பெட்ரோல், டீசல் விலை கூடுதல் ஆகிவிடுகிறது.  இந்திய அரசு 29 நாடுகளுக்கு குறைந்த விலையில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாக தெரிகிறது. பன்னாட்டு அளவில் விலை வீழ்ச்சியின் போதும் தமிழகத்திடம் வரிகளை உயர்த்தி கொள்ளையடித்தது. எனவே, தமிழக அரசு பெட்ரோலை நேரடியாக இறக்குமதி செய்யும் உரிமையை இந்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9. விளைநிலங்களை பாதுகாக்க வீட்டுமனையாக்குவதைத் தடைசெய்யும் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

10. எண்ணெய் நிறுவனங்களுக்கும், குழாய் பதிப்பு நிறுவனங்களுக்கும் விவசாயிகள் நிலம் கொடுப்பது மிகத் தவறானது.  காவிரிப்படுகையில் விளைநிலங்கள் விவசாயத்திற்குதான் பயன்படுத்தப்பட வேண்டுமேயொழிய, எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு அல்ல. நிலம்தர மறுக்கும் இயக்கத்தை படுகை முழுவதும் நடத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

11. தண்ணீர் என்பது அனைத்து உயிர்களுக்குமான இயற்கையின் கொடை.  அதனை விற்பனைப் பண்டமாக்குவது உயிர் வாழ்வுரிமைக்கு விரோத செயலாகும்.  தண்ணீரை ஒரு பண்டமாக கருதுவதும், விலைக்கு விற்பதும் தடைசெய்யப்பட வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

12. மனிதகுலம் காணாத கதிர்வீச்சு அபாயம் கொண்ட தேனி பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதை உடனடியாக நிறுத்த இம்மாநாடு கோருகிறது.

13. படையெடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் கனிமவளங்களை அள்ளிச் செல்ல வசதி செய்யும் வகையில் எட்டுவழிச் சாலை, 16 வழிச்சாலை, சிறு,பெரும் துறைமுகங்கள் என பெரிய திட்டங்களை உள்ளடக்கிய பாரத் மாலா, சாகர்மாலா போன்றத் திட்டங்களைக் கைவிட இம்மாநாடு கோருகிறது.

14. உலகின் மூத்தகுடி தோன்றியது தமிழ்நிலத்தில் தான் என்பதற்கான சான்றாக விளங்கும், சிறு,பெரும் மலைகளை நொறுக்கி அள்ளுவது, தமிழின அடையாள அழித்தொழிப்பு மட்டுமில்லாமல், சூழலியல் கேடுகளை விளைவிக்கும்.  ஆகையால் மலைகளை நொறுக்கி அள்ளுவதைத் தடை செய்ய இம்மாநாடு வேண்டுகிறது.

15. பல்லாயிரம் ஆண்டுகள் மிக கவனமாக பாதுகாக்க வேண்டிய கதிர்வீச்சுக் கழிவுகளை உருவாக்கும் அணுஉலைப் பூங்கா அமைப்பதை இம்மாநாடு கண்டிக்கிறது. செயல்பட்டுக்கொண்டிருக்கும் அணு உலைகளையும் நிரந்தரமாக மூட இம்மாநாடு வலியுறுத்துகிறது.

16. மேகதாட்டில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தவும், காவிரியின் மரபுவழி பயன்பாட்டு உரிமையைக் காக்கவும் காவிரி ஆணையத்திற்கு அணைகளை திறக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள ஆறுகளுக்கு மாநிலங்களுக்கு இடையில் எழும் சிக்கல்களை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் என்று மாநிலங்களுக்குச் சொந்தமான ஆறுகளை தன் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஆறுகளை பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கும் வஞ்சகத் திட்டத்தை இந்திய அரசு கைவிட இம்மாநாடு கோருகிறது.

17. ஐஸ்லாந்திலும், நார்வேயிலும் நாட்டின் முழு ஆற்றல் பயன்பாட்டுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.  மேலும், பல நாடுகள் எதிர்காலத்தில் இந்த இலக்கை அடைய பயணிக்கின்றன.  டென்மார்க் 2050 ஆம் ஆண்டளவில் மின்சாரம், போக்குவரத்து, வெப்பமூட்டல், குளிர்வித்தல்- அனைத்துக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்டே நிறைவு செய்வது என அறிவித்துவிட்டது.  பலநாடுகளுக்கு இயலக்கூடிய ஒன்று தமிழ்நாட்டுக்கும் ஏற்கக்கூடிய, ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  இது கணிசமான ஆற்றல் காப்புறுதியை உருவாக்குவதோடு பேரளவு பொருளியல் நலன்களையும் தரும்.  ஆகவே, தமிழகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்த இம்மாநாடு பரிந்துரைக்கிறது.

18. இயற்கை வளம் – கனிமவளம் காக்க போராடியதற்காக சிறை சென்றவர்கள் மற்றும் வழக்குகள் புனையப்பெற்றவர்கள் நிபந்தனையின்றி வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

No comments