சிங்கள மக்கள் ஏன் இந்த ஆட்சியை மாற்ற நினைக்கின்றனர்? - ஜெரா

கடந்த குடும்ப ஆட்சியுடன் ஒப்பிடும்போது இந்த நல்லாட்சி வரலாற்றிலேயே மிகப் பலயீனமானதாக இருப்பினும் சிங்கள மைய அரசை நிலைநிறுத்துவதிலும், அதனை விரிவுபடுத்துவதிலும் வெற்றிகரமாகவே செயற்பட்டிருக்கிறது.

வாசலில் நின்ற போர்க்குற்ற விசாரணையை தவிடுபொடியாக்கிப் போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது.

சீனா துண்டாடி ஆக்கிரமித்திருந்த சிறீலங்காவை, கால இழுத்தடிப்பை செய்தாவது, ஆக்கிரமிப்பு வேகத்தில் தடையை ஏற்படுத்தியிருக்கிறது. பழைய அரசெனில் அம்பாந்தோட்டை மாவட்டமே விற்பனையாகியிருக்கும்.

தமிழர்களின் அரசியல் பலமாக இருந்த (அப்படித்தான் சொல்லிக்கொண்டார்கள்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் உதிரத்தை முற்றாக உறிந்து இழுத்துவிட்டு, ஐ.தே.க ரத்தத்தை மீளேற்றியிருக்கிறது. மேற்கு சார்புடையவராகத் தம்மை காட்டிக்கொண்டாலும் சிறீலங்காவை நேரடி காலனியாதிக்கங்களிலிருந்து காப்பாற்றி வந்த பாரம்பரியமுடையது ஐ.தே.கவின் ரத்தம்.

வடக்கு, கிழக்கின் கண்ணீர் போராட்டமாக இருந்து வந்த காணாமலாக்கப்பட்டவர்களை போராட வைத்தே சலிப்படைய வைத்திருக்கிறது.

பழைய ஆட்சியை போலல்லாமல் ஆரவாரமின்றி அமைதியாக வடக்கு, கிழக்கில் தமிழர் பாரம்பரிய நிலத்தொடர்ச்சியை வெற்றிகரமாக சிதைத்திருக்கிறது இவ்வரசு.  நாள் தோறும் பெளத்த விகாரைகள் முளைத்துக்கொண்டேயிருக்கின்றன. இந்த நேரத்திலும் எல்லைக்கிராமங்களில் சிங்கள மக்கள் குடியேறிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆட்சியைவிட சற்றும் குறையாத புலனாய்வுக் கண்காணிப்புக்கள் தொடர்கின்றன. முன்னைய ஆட்சியில் சீனா போனில் படமெடுத்த புலனாய்வாளர்கள் DSLR கெமராவில் போட்டோ எடுத்து கண்காணிக்கும் அளவிற்க்கு வளர்ச்சியடைந்திருக்கின்றனர்.

பொருளாதார சரிவை, விலைவாசி உயர்வை ஒரு பிரச்சினையாக இலங்கை பிரஜைகள் சொல்லமுடியாது. நாட்டை பல்தேசிய கம்பனிகளிடம் விற்கும்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டிருந்த இனங்கள் இது குறித்தெல்லாம் பேச லாயக்கற்றவர்கள்.

இன்னும் நீளமாக நல்லாட்சியில் சிங்களவர்களுக்கு கிடைத்த நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாது ஆட்சியை மாற்றவேண்டும் என்று துடியாய் துடிக்கின்றனர் எனில், "அவர்கள்" எதிர்பார்ப்பது குரூரமான - மனித குலமே வெட்கித்தலைகுனிந்த 2009 ஐத்தான். அந்த முகம் அப்படித்தான் எனில் அதனை யார்தான் ஒப்பனை செய்யமுடியும்.

No comments