பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை ஆட்சேபித்து மௌன பேரணி!


தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் மற்றும் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை ஆட்சேபித்து மௌன பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணி நாளை மறுதினம் காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக இந்து அமைப்புக்கள் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்ததும் அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் இந்து சமய பேரவை ஆகியன இணைந்தே இந்த பேரணியை முன்னெடுக்கவுள்ளன. எனவே கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்துக்களின் மனவுணர்வை வெளிப்படுத்துவோம்” என அழைப்பு விடுத்துள்ளார்.

No comments