பிரான்ஸ் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலை நினைவேந்தல்;

2006ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் கொல்லப்பட்ட அக்சன் சென்ரர் லா பெய்ம் என்ற பிரான்சியத் தொண்டு நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தலானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நினைவேந்தலானது கடந்த 4ம் திகதி மாலை 5.45 மணியளவில் திருகோணமலை கடலேரிக்கரைப் பூங்காவில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி இரா.சிறீஞானேஸ்வரன் மாவட்டச் செயலாளர் க.குகன், முன்னணியின் நகரசபை உறுப்பினர்கள் சற்பரூபன் மற்றும் ராம்கி, மூதூர் பிரதேசசபை சுயேட்சைக் குழு உறுப்பினர் ஜெகன் உட்பட சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அமைதிப் பிரார்த்தனையைத் தொடர்ந்து அஞ்சலிச்சுடரினை அன்று கொல்லப்பட்டவர்களில் கணவரையும் மகளையும் இழந்த திருமதி கணேஸ் மற்றும்   கொல்லப்பட்ட கோகிலவர்த்தனியின் தாயர் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

அங்கு கூடியிருந்தவர்களின் கைகளில் வைத்திருந்த பதாகைகளில் ‘’மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்‘’ ‘’ ஸ்ரீலங்கா அரசும் கொலைக்கு உடந்தையா??‘’  ‘‘நீதி வேண்டும்‘‘ ‘‘தாமதிக்கும் நீதி உண்மையைப் புதைக்கின்றது‘‘ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

தொடர்ந்து அங்கு பேசிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் – கொலைகள் நடந்தததைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான ஆசிரியர்களின் அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் இரண்டு காவல்துறையினர் உட்பட கடற்படை விசேட கொமாண்டோக்களே இப்படுகொலைகளை நடாத்தினர் எனக் குற்றஞ்சாட்டியிருந்தது என்றும் அப்போதைய ஸ்ரீலங்கா அரசின் சனாதிபதி  மகிந்த ராசபக்ச 2007ம் ஆண்டில் பாரதூரமான பதினாறு மனித உரிமை மீறல்களை விசாரித்து அறிக்கையிடும் ஆணையுடன் சனாதிபதி ஆணைக்குழுவொன்றை சர்வதேச அவதானிப்பாளர்களை உட்படுத்தி உருவாக்கினார். ஆனால் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் அடுத்த வருடமே அவ்வாணைக்குழுவில் இருந்து விலகினர். அந்த ஆணைக்ஹகுழுவின் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு நாம் நினைவேந்துவது நாங்கள் பாதிக்கப்பட்டவர்களாக நியாயம் கோரி நிற்கின்றோம். எங்களது உறவுகளை அனியாயமாகக் கொன்று குவித்ததை நாம் மறக்கவில்லை. கொலையாளிகளை மன்னிக்கவும் இல்லை. 13 வருடங்களாகியும் எமக்கு நீதி கிடைக்கவில்லை அதற்காக நாம் ஓய்திருக்கப்போவதில்லை. நீதி வேண்டி வருடாவருடம் இந்நினைவேந்தலை நாம் மேற்கொள்வோம்‘‘ என்றார்.

No comments