நீதிபதி சிதம்பரேசுக்கு ஒரு நீதி, திருமுருகன் காந்திக்கு வேறு நீதியா? -நீதிபதி ஹரிபரந்தாமன்

கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. சிதம்பரேஷ்.

உலக தமிழ் பிராமணர்கள் மாநாடு கேரளாவில் நடந்தது. அதில் பேசிய நீதிபதி சிதம்பரேஷ், பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள் (அவர்களுக்கு மறு பிறவி கிடையாதாம்!) என்றும், எல்லா நற்குணங்களையும் கடவுள் வழங்கியுள்ள உயர்சாதியினர் என்றும் பேசியுள்ளார்.

மேலும், சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்றும், பொருளாதார அடிப்படையில் தான்  இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும் கூறிய அவர், இதற்காக பிராமண சமூகம் போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஏழை பிராமண சமையல்காரரின் மகனுக்கு அவர் உயர்சாதி என்பதால் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்றும், அதே நேரத்தில், பணக்கார மர வியாபாரியின் மகன் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் கூறிய அவர், இதைப்பற்றி பிராமணர்கள் ஆழ்ந்து விவாதித்து செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவருக்கு ஒரு கேள்வி...

பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பணக்கார மர வியாபாரியின் மகனுக்கு உயர்சாதியை சேர்ந்த ஏழை பிராமண சமையல்காரரின் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டல், அந்த ஏழை பிராமணர் பெண் கொடுப்பாரா?

அவரது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுப்பது அவரின் உரிமைதான்.

ஆனால், சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு உள்ள சமூகம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு அதிகார அமைப்புகளில்  பணிபுரிய வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அரசமைப்பு சட்டம் இட ஒதுக்கீடு வழங்குகிறது.

ஆனால், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி உயர் சாதி வெறியுடன் பேசுகிறார்.

சாதிய சமூகத்தில் உயர்சாதியினரின் ஆதிக்கம் இன்றுவரை குறையவில்லை என்றும், அரசமைப்பு கூறும் சமூக  நீதியை வென்றெடுப்போம் என்றும் பேசிய திருமுருகன் காந்தியின் பேரில் சாதி துவேசத்தை தூண்டும் வகையில் பேசினார் என்று, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153-A-இன் கீழ் தமிழக காவல்துறை பல வழக்குகளை பதிவு செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், அந்த முதல் தகவல் அறிக்கைகளை (FIR) ரத்து செய்ய முடியாது என்று திருமுருகன் காந்தி போட்ட வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி சிதம்பரேசுக்கு ஒரு நீதி, திருமுருகன் காந்திக்கு வேறு நீதி என்பதுதான் மனுநீதி.

காண்க: Times of India (25.07.2019) — https://timesofindia.indiatimes.com/city/kochi/brahmins-are-twice-born-have-good-qualities-kerala-hc-judge/articleshow/70371798.cms

No comments