முன்னணி உறுப்பினருக்கு அச்சுறுத்தல் !


வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொன்னாலையில் மத போதனையில் ஈடுபட்ட சின்னத்தம்பி சதீஸ்வரன் என்ற போதகரே இதன் சூத்திரதாரி எனவும் அவரை விசாரணைக்கு உட்படுத்துமாறும் பொன்ராசா தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பொன்னாலையில் இந்திய வீடு ஒன்றில் மத போதனை மற்றும் ஜெபக் கூட்டத்தை நடத்திய கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் சின்னத்தம்பி சதீஸ்வரன் என்பவருக்கு அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புக் காட்டியிருந்தனர். முற்றுமுழுதான சைவ சமயச் சூழலில் கிறிஸ்தவ மத செயற்பாட்டை தாங்கள் விரும்பவில்லை என மக்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னணியில், கடந்த 18 ஆம் திகதி குறித்த மதச் செயற்பாட்டிற்கு எதிர்ப்புக் காட'டிய ஐந்து பெண்கள் குறித்த மத போதகர் எனக் கூறப்படுபவரின் முறைப்பாட்டிற்கு அமைய வட்டு.பொலிஸ் நிலையத்தில் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு இரவு 10.30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
18 ஆம் சின்னத்தம்பி சதீஸ்வரன் என்பவரின் மனைவியால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் முகப்புத்தகம் ஒன்றில் தரவேற்றப்பட்டு குறித்த பெண்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளதுடன் பொன்ராசா என்பவருக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
அணையும் விளக்கு பிரகாசமாகத்தான் எரியும், விரைவில் நாள்களை எண்ணிக்கொண்டிரு, எமக்கு சுடலை புதிது அல்ல, அடிதடியும் புதிது அல்ல, கிறிஸ்தவத்திற்கு எதிராகச் செயற்படாமல் ஒதுங்கிப் போ, இல்லையேல் கடவுளாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது என கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கப்பட்டு தமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என பொன்ராசா தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உடன் விசாரணை நடத்துமாறும் பொன்ராசா கேட்டுக்கொண்டுள்ளார்

No comments