வயசுபோன ஆண் குரங்குகளின் அட்டகாசத்தால் அல்லல்ப்படுகிறதா சிறீலங்கா? - நேரு குணரட்ணம்

முதலில் குரங்கினம் இத்தலைப்பிற்காக என்னை மன்னித்துவிடனும். நீங்கள் இவ்வளவு மோசம் இல்லைத் தான்.. சிறீலங்கா பாராளுமன்றம் ஆண் குரங்குகளால் நிறைந்திருக்கிறது. அதுவும் வயசு போன குரங்குகளால். அங்கு பெண்களுக்கு இடமேயில்லையாம் போங்கள். சிறீலங்கா பாராளுமன்றத்தின் 225 பேரில், பெண்கள் வெறும் 12 பேர் தான். அதாவது 5.33 சதவீதம். அந்த 12 பேரில் ஒருவர் நம்மவர்.. கைதட்டுங்களேன். அதாவது 16 இல் ஒன்று. 6.25 சதவீதப் பிரதிநிதித்துவம். 2009 இற்கு முன் பெண்கள் சமத்துவத்தில் மிக வேகமாக முன்னேறி வந்த தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலை.

உலகின் முதல் பெண் பிரதம மந்திரி, அது மட்டுமின்றி நிறைவேற்று அதிகாரமுள்ள ஒரு பெண் ஜனாதிபதி, பெண் அதியுயர்நீதியரசர் மற்றும் பெண் சட்டமா அதிபர் ஒருவர் என இருந்த இலங்கைத் தீவில் கடந்த 2018 சனத்தொகை கணிபீட்டின் படி, 10 கோடியே 49 இலட்சம் ஆண்களும், 11 கோடியே 18 இலட்சம் பெண்களும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்களை விட 69 இலட்சம் பெண்கள் அதிகம். அதாவது மொத்த சனத்தொகையில் 51.6 சதவீதமாக உள்ள பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வெறும் 5.33 சதவீதம் தான்.

பெண்கள் விடயத்தில் முதல்ப்பிரதமர், சனாதிபதி என எய்திய உயர்நிலை கருதும் போது,  தென்னாசிய நாடொன்றாகிய இலங்கையில் பெண்களின் பொதுத் துறைக்கான பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் என பொதுவாக எதிர்பார்க்கப்படுவது இயல்பே. ஆனால் இந்த நிலை அதியுயர் பொதுத் துறை அமைப்பாகிய பாராளுமன்றத்திலேயே பிரதிபலிக்கவில்லை. இதே வேளை பாகிஸ்தான், பங்களாதேஸ்,  இந்தியா, பூட்டான்  மற்றும் நேபால் ஆகிய சார்க் நாடுகளின் பாராளுமன்றங்களின் பெண் பிரதிநிதித்துவம் இலங்கையை விட மிகஅதிகமாகவே காணப்படுகின்றன. பாராளுமன்றங்கள் சங்கம்  உலக அடிப்படையில் 192 நாடுகளில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில் இலங்கை மிக மோசமாக 180 வது இடத்திலேயே உள்ளது.

இதில் ஆச்சரியம் தரும் வகையில், உலகிலேயே முதல் இடத்தில் ருவண்டா உள்ளது. அங்குள்ள 80 பாராளுமன்ற உறுப்பினர்களில் 49 பேர் பெண்கள், அதாவது 61.25 சதவீதப் பிரதிநிதித்துவம். 50 சமவீதத்திற்கு மேல் உள்ள ஏனைய 3 நாடுகளையும் அறிந்தால் கூட ஆச்சரியப்படுவீர்கள். 322 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், 53.22 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் இரண்டாவது இடத்தில் கியூபாவும், 69 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், 53.08 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் மூன்றாவது இடத்தில் பொலிவியாவும், 14 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் நான்காவது இடத்தில் அன்டோராவும் உள்ளன.

தென் ஆசிய வட்டகை நாடுகளில், 72 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், 32.73 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் 37ஆவது இடத்தில் நேபாலும், 90 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20.63 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் 99ஆவது இடத்தில் பங்களாதேசும், 69 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20.23 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் 103ஆவது இடத்தில் பாக்கிஸ்தானும், 7 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14.89 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் 136ஆவது இடத்தில் பூட்டானும், 78 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14.39 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் 141ஆவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

இப்போது சொல்லுங்கள் சிறீலங்கா பாராளுமன்ற நடைமுறையில் யாருக்குத் தான் என்ன நீதி கிடைத்துவிடும்.. இதற்கு இங்குள்ள வயதான கிழட்டு மந்திகளும் முக்கிய காரணம்.. மாற்றங்களை நோக்கிய இளைய சிந்தனையாளர்களோ அவர்களுக்கான இடமோ இல்லாத அவையில் மயிலே இறகு போடு என்று காத்திருக்கலாம் என ஆசை காட்டும் எம் தலைமைகளை என்ன செய்வது. இங்கும் கிழட்டு மந்திகளின் இராச்சியம் தானே! கிழட்டு மந்திகளில் விர்வான ஆய்வை அடுத்த பதிவில் பார்ப்போம்...

No comments