NIA தமிழகத்துக்குள் நுழைய தடம் அமைத்துக் கொடுத்ததே தி.மு.கதான்; ராம்தாஸ்

தேசிய புலனாய்வு முகமையை தமிழகத்துக்குள் நுழைய தடம் அமைத்து கொடுத்ததே திமுகதான் என பாமக நிறுவனர் ராம்தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தி.மு.க. கண்டிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடம் போடுவதற்கு எடுத்துக்காட்டு இது என்று கூறும் அளவுக்கு தான் மு.க.ஸ்டாலினின் கருத்து அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்குள் தேசிய புலனாய்வு முகமை நுழைவதற்கு தடம் அமைத்துக் கொடுத்தது தி.மு.க. தான். அதை மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

தேசிய புலனாய்வு முகமை 2009-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதற்காக 2008-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விசாரணை நடத்தும் அதிகாரம் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்த சட்டத்தை இயற்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்தை தி.மு.க. முழுமையாக ஆதரித்தது. அதுமட்டுமின்றி அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தார். அவரது தந்தை கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தார். அப்போது யாரும் வாயைத் திறக்கவில்லை. இப்போது தான் தி.மு.க.வுக்கு இதில் ஞானம் பிறந்திருக்கிறது.

தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் நான்கு திருத்தங்களை செய்வதற்காக சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது தி.மு.க. முழுமையாக ஆதரித்தது. மேலும் தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்தை ஆதரித்தும் வாக்களித்தது. தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்துக்கு ஆளுங்கட்சியை விட தீவிரமாக வக்காலத்து வாங்கிய தி.மு.க. இப்போது அதை எதிர்ப்பது போல நாடகமாடுவது பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் செயலுக்கு ஒப்பானதாகும். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் பறிபோய்விடுமே? என்ற பதற்றம் தான் இதற்கெல்லாம் காரணமாகும்.

தி.மு.க.வின் இயல்பே இரட்டை வேடம் தான் என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு புரியும். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்டு, ஆட்சியை இழந்தவுடன் அதை கடுமையாக எதிர்ப்பது, மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது ‘நீட்’ தேர்வு கொண்டு வருவதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு, ஆட்சியை இழந்த பின் அதை கடுமையாக எதிர்ப்பது போன்றவை தி.மு.க.வின் அரசியல் பித்தலாட்டங்கள். மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டதால், எப்போதுமே அவர்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கும் தி.மு.க.வுக்கு இனி வரும் தேர்தல்களில் மக்கள் சரியான பாடம் புகட்டப்போவது உறுதி என கூறியுள்ளார்.

No comments