காஷ்மீர் - லடாக்’ மிஷன் நடந்தது எப்படி?- கே. எஸ்.இராதாகிருஷ்ணன்.

காஷ்மீரில் கடந்த 2016 ஏப்ரலில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. கடந்த ஆண்டு ஜூனில் பாஜக திடீரென ஆதரவை வாபஸ் பெற்றதால் மெகபூபா முப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அப்போதே 'மிஷன் காஷ்மீர்' திட்டத்துக்கு விதை ஊன்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம். ஆந்திராவை சேர்ந்த இவர் 1987-ம் ஆண்டு சத்தீஸ்கர் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கடந்த 2004 முதல் 2008 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் தனிச் செயலாளராகவும் கடந்த 2012-ம் முதல் பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றினார்.

கடந்த 2014 மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற போதும் பிரதமர் அலுவலகத்தில் சுப்பிரமணியம் நீடித்தார். 2015 மார்ச் வரை பிரதமருடன் இணைந்து பணி யாற்றிய அவர் பின்னர் சத்தீஸ்கர் ஆட்சிப் பணிக்கு திரும்பினார். காஷ்மீரில் மெகபூபா முப்தி ஆட்சி கவிழ்ந்ததும் கடந்த ஆண்டு ஜூனில் காஷ்மீரின் புதிய தலைமைச் செயலாளராக பி.வி.ஆர். சுப்பிர மணியம் நியமிக்கப்பட்டார். 'மிஷன் காஷ்மீர்' திட்டத்துக்கு அப்போது தான் வியூகங்கள் வகுக்கப்பட்டன. இதன்படி மக்களவைத் தேர்த லுக்கு முன்பாக கடந்த பிப்ரவரியிலேயே காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் புல்வாமா தாக்குதலால் அந்த திட்டம் தள்ளிப்போனது.

மத்தியில் பாஜக கூட்டணி மீண்டும் பதவியேற்றதும் 'மிஷன் காஷ்மீர்' உயிர்பெற்றது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் ஒன்றாகக் கைகோர்த்தனர். பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி திட்ட வியூகங்களை இறுதி செய்தனர். இதன்படி பாதுகாப்பு, அரசியல் ரீதியாக மிகத் துல்லியமாக காய்கள் நகர்த்தப்பட்டன.

'மிஷன் காஷ்மீர்' உயர்நிலைக் குழுவில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சட்டத் துறை செயலாளர் அலோக் ஸ்ரீவஸ்தவ், கூடுதல் செயலாளர் ஆர்.எஸ்.வர்மா, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா ஆகி யோரும் சேர்க்கப்பட்டனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்ட விவகாரங்களை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் அவரது குழுவினரும் ஏற்றுக் கொண்டனர். காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடு களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அவரது குழுவினரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். காஷ்மீர் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் மாநில நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாகவே 'மிஷன் காஷ்மீர்' திட்டத்தின் முழு விவரங்களை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷியிடம் அமைச்சர் அமித்ஷா விளக்கமாக எடுத்துரைத்துவிட்டார். அவர்களும் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மாநிலங்களவையில் பெரும்பான்மையை எட்டும் பொறுப்பு பாஜக எம்.பி.க்கள் அனில் பலூனி, பூபேந்திர யாதவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் விவேகத்தால் தெலுங்கு தேசம் கட்சியின் 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் கடந்த ஜூனில் பாஜகவில் இணைந்தனர்.

சமாஜ்வாதியை சேர்ந்த 3 எம்.பி.க்களும் காங்கிரஸை சேர்ந்த ஒரு எம்.பி.யும் பதவியை ராஜினாமா செய்தனர். இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் கூடியது. அடுத்த கட்டமாக காஷ்மீரின் மூத்த பத்திரிகையாளர்களை அமைச்சர் அமித் ஷா அண்மையில் சந்தித்து தேச நலன் கருதி சுய கட்டுப்பாட்டுடன் செய்திகளை வெளியிடும்படி அறிவுறுத்தினார். தீவிரவாத அச்சுறுத்தலை காரணம் காட்டி மத்திய படைகள் காஷ்மீரில் படிப்படியாக குவிக்கப்பட்டன. தகவல் தொடர்புக்காக டெல்லியில் இருந்து 2,000 செயற்கைக்கோள் தொலைபேசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அமர்நாத் யாத்திரை ரத்து செய் யப்பட்டது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 5-ம் தேதி அமைச்சர் அமித் ஷா, ரகசியத்தை உடைத்து மாநிலங்களவையில் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எளிதாக நிறைவேறின. ஆரம்பம் முதல் முடிவு வரை ரகசியம் காத்து 'மிஷன்  காஷ்மீர்' திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-கே. எஸ்.இராதாகிருஷ்ணன்-

No comments