எதிர்பார்த்தோம்! ஏமாந்தோம்! மீண்டும் போர்! அன்றைய அதே பல்லவி இதோ ஆரம்பம்! பனங்காட்டான்

யார் என்னதான் சொன்னாலும் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக அவருக்கே ஆதரவு வழங்கும். தமிழர் தாயகத்தில் ரணிலின் ஏஜன்டாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் செயற்படுவார். இதனை நியாயப்படுத்த புதிய அரசியல் அமைப்பும் தமிழர்களுக்கான தீர்வும் ரணில் வழங்குவாரென கூட்டமைப்பு கதையளக்க ஆயத்தமாகிறது. 


யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்றொரு அர்த்தமுள்ள பழமொழியுண்டு.

இலங்கையில் தேர்தல் காலம் ஆரம்பமாகிவிட்டது என்பதை தெற்கிலும் வடக்கிலுமிருந்து வரும் சொப்பனக் குரல்கள் பளிச்சிட வைக்கின்றன.

சிங்களக் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை அறிவிப்பதற்கு முன்னர், மற்றைய கட்சியின் வேட்பாளர் அவரா இவரா என்று ஆருடம் பார்ப்பதில் அக்கறையாகவுள்ளன.

மைத்திரி எந்தப் பக்கம் சேருவார் என்ற கேள்வியும் விசுவரூபமெடுத்துள்ளது. இதுபற்றிய முன்னுக்குப்பின் முரணான தகவல்களை ஊடகங்கள் போட்டி அடிப்படையில் வெளியிட்டு வருகின்றன.

மகிந்தவுடன் மைத்திரி இணைவார் என்று ஓர் ஊடகம் சொன்னால், கோதபாய ஜனாதிபதியாவதை மைத்திரி ஏற்க மாட்டார் என்கிறது இன்னொரு ஊடகம்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் என்பதற்கு இடமேயில்லையென்று அறிவித்துவிட்டது ஐக்கிய தேசிய கட்சி.

இக்கட்சிதான் 2015ஆம் ஆண்டுத் தேர்தலில் மைத்திரியை பொதுவேட்பாளராக்கி வெற்றிபெற உழைத்தது. ஆனால், அந்தத் தேநிலவுக் காலம் முதல் ஆறு மாதங்களுக்குள்ளேயே முடிந்துவிட்டது.

மைத்திரி தமது அரசியல் வாழ்வில் யாருடன் நேர்மையாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் நடந்துள்ளார்?

இவரை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக்கியது சந்திரிகா குமாரதுங்க. பின்னர் இவரை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைத்து பொதுவேட்பாளராக்கி ஜனாதிபதியாக்கியதும் இதே சந்திரிகாதான்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் சந்திரிகாவை சுதந்திரக் கட்சி அலுவலகத்துள் செல்லவிடாது தடுத்ததுடன், கட்சியின் மாநாட்டுக்கு அழைக்காது உதாசீனமும் செய்தார்.

மகிந்த ஜனாதிபதியாகவிருந்த பத்து வருடங்களும் அவரது அமைச்சரவையில் முக்கியமானவராகவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகவுமிருந்து நெருங்கிப் பழகிய மைத்திரி, ஒரு நாள் இரவு மகிந்தவுடன் அமர்ந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுநாள் ரணிலோடு சேர்ந்து மகிந்தவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அடுத்த ஒரு வருடத்துள் ரணிலுடன் தெறிப்பு ஏற்பட்டது. ஒரே அரசாங்கத்தில் தம்பதிகளாகவிருந்து ஆட்சி நடத்த வேண்டிய இவர், ரணிலுக்கு எதிராக சதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். (ரணிலும் சும்மா இருக்கவில்லை).

இறுதியில், ஐம்பத்தொரு நாட்கள் ரணிலின் பிரதமர் பதவியை பறித்து, அதை மகிந்தவிடம் கொடுத்து, பின்னர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க மீண்டும் ரணிலை பிரதமராக்கினார்.

ரணில் மீண்டும் பிரதமரானால் ஒரு மணித்தியாலத்தில் ஜனாதிபதிப் பதவியை துறப்பேனென்று அறைகூவிய மைத்திரி இன்றும் அப்பதவியிலேயே இருக்கிறார்.

இது பரவாயில்லை. இப்போது அரசியலில் நம்பிக்கையுள்ள நண்பர் ஒருவர்கூட இல்லாத நிலையில், மீண்டும் ஜனாதிபதியாகும் நப்பாசையால் கூடாத கூட்டங்களைத் தேடி அலைகிறார்.

ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தையென்ன என்ற பாடலுக்கு இன்று பொருத்தமான நாயகனாக மைத்திரியே உள்ளார்.

மறுதரப்பில், மகிந்த ராஜபக்ச 19வது அரசியல் திருத்தம் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாமையால், அவரது சகோதரர் கோதபாய போட்டியிடுவாரெனக் கூறப்படுகிறது.

போட்டிக்கு ஆயத்தமாக அமெரிக்க பிரஜாவுரிமையை மீளளித்த கோதபாய, களமிறங்க ஆயத்தமாக சிங்கப்பூர் சென்று தேவையான உடற்சிகிச்சைகளையும் பூர்த்தி செய்துள்ளார். கொழும்பு திரும்பியதும் ராஜபக்ச குடும்ப நாடகத்துக்கான திரை விலக்கப்படும்.

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார்? சபாநாயகர் கரு ஜெயசூரியவும், அமைச்சர் சஜித் பிரேமதாசாவும் தாங்கள் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளனர். கட்சிக்குள்ளே இருவருக்கும் தனித்தனி அணிகள் உண்டு. ஆனாலும் சஜித்துக்கே கூடிய ஆதரவு.

ஆனால், ரணில் இதுவரை தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஒரு தடவைகூட அறிவிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பெறாமகன் ரணில். அதாவது, ஜெயவர்த்தனவின் தாயாரும் ரணிலின் தாயின் தந்தையும் கூடப்பிறந்த சகோதரர்கள்.

தமது ஏக புதல்வன் ரவி ஜெயவர்த்தனவுக்கும் அரசியலுக்கும் எட்டாம் பொருத்தமென்பதை அறிந்த நிலையில், ரணிலைத் தமது அரசியல் வாரிசாக 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் கொண்டு வந்து வெற்றிபெறச் செய்து, மிக இளவயதிலேயே அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயவர்த்தன.

1970இலிருந்து இன்றுவரை எந்தத் தேர்தலிலும் தோல்வி காணாதவர் ரணில். (மகிந்தவும் 1970இலேயே நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முறை தெரிவாகினாரானாலும், 1977ல் தோல்வியடைந்து 1989வரை பதவியிழந்திருந்தார);. ரணில் அடுத்தாண்டில் அரசியல் வாழ்வில் நாற்பதாவது ஆண்டைப் பூர்த்தி செய்கிறார்.

வடலி வளர்த்து கள் குடிப்பது என்ற வாக்கியத்துக்கிணங்க ஜனாதிபதிப் பதவிக்காகவே தமது அரசியல் வாழ்வை வளர்த்துக் கொண்டு வந்த ரணில், அந்தப் பதவியை இழக்க விரும்புவாரா?

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தமது கட்சி சார்பில் எப்படியாவது போட்டியிடுவார். அவ்வேளை சஜித் பிரேமதாசாவை பிரதமராக்க உறுதி வழங்குவார்.

யார் என்னதான் சொன்னாலும் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக அவருக்கே ஆதரவு வழங்கும். தமிழர் தாயகத்தில் ரணிலின் ஏஜன்டாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் செயற்படுவார். இதனை நியாயப்படுத்த புதிய அரசியல் அமைப்பும் தமிழர்களுக்கான தீர்வும் ரணில் வழங்குவாரென கூட்டமைப்பு கதையளக்க ஆயத்தமாகிறது.

ரணில் ஜனாதிபதியாகி சஜித் பிரதமரானால், சிலவேளை உதவிப் பிரதமர் என்றொரு பதவி கூட்டமைப்பின் சுமந்திரனுக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்பட நேராது. பக்கத்து வீட்டு தாடிக்காரத் தலைவர் சொன்னாரென்று சொல்லி தப்பிவிடலாமல்லவா? அரசியல் என்றால் இப்படியும் அப்படியும்தான்.

தமிழர் தாயகத்தின் நிலைமையை கொஞ்சம்(?) பார்க்கலாம்.

கடந்த வார இறுதியில் தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. திருமலைக் கிளையின் தலைவராக கனடாவிலிருந்து சென்றிருந்த ஒருவரை நியமித்ததிலிருந்தே சின்னச் சின்ன குழப்பங்கள் காணப்பட்டன.

மாநாட்டின் இறுதி நாளன்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரை வித்தியாசமானது என்று சொல்வது தவறு. வழக்கமான தமிழரசுக் கட்சியின் தேர்தல் கால உரையே.

1965ஆம் ஆண்டில் டட்லி சேனநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசில் அமைச்சராகவிருந்த எம்.திருச்செல்வம், தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்னர் திருமலை கோணேஸ்வரர் ஆலய புனிதநகர் பிரகடனத்தை பிரச்சனையாக்கி அரசிலிருந்து வெளியேறியது ஞாபகமிருக்கிறதா?

அப்போது, கட்சியின் முக்கியஸ்தரான அ.அமிர்தலிங்கம் என்ன சொன்னார்? 'எதிர்பார்த்தோம், ஏமாந்தோம், இனியும் அங்கிருக்க மாட்டோம்" என்ற அதே கர்ச்சனைதான் சம்பந்தரிடமிருந்து இப்போது வந்துள்ளது.

இன்றைய அரசு தங்களை ஏமாற்றிவிட்டது என்று தெரிவித்திருக்கும் சம்பந்தரால், நேரடியாக எவரது பெயரையும் கூறி குற்றஞ்சாட்ட மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. இதே அரசு நான்கு வருடங்கள் வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அதனால் கிடைத்த சுகபோகங்களை மறந்து எவ்வாறு பெயர் கூறித் தாக்க முடியும்?

அதனாற்தான் போலும் பின்வருமாறு பொதுப்படையாக குற்றப்பத்திரிகை வாசித்துள்ளார். 'ஆட்சித் தலைவர்கள், பெரும்பான்மை இனத்தலைவர்கள் தாங்கள் விரும்பும் சில கருமங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் தீர்வு ஏற்படுவதையும், அதிகாரப்பகிர்வு ஏற்படுவதையும் தாமதிப்பதற்கு முயல்கிறார்கள். ஆகவே, அடுத்த ஓரிரு மாதங்களில் தீர்க்கமான முடிவெடுப்போம்" என்பது சம்பந்தரின் பேச்சின் சாராம்சம்.

வார்த்தைகளை எவ்வாறு அளந்து பேசியுள்ளார். ஆட்சித் தலைவர்கள் என்றால் மைத்திரியா ரணிலா என்பதை மக்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையினத் தலைவர்கள் என்பது மகிந்த அணியினர் என்பது புரிகிறது.

அரசியலமைப்பும், தமிழ் மக்களுக்கான தீர்வும் தற்போதைய அரசினால் நகர்த்தப்படவில்லை. இதற்குக் காரணம் அவர்களே தவிர வேறு யாருமன்று. ஆனால், சம்பந்தரின் பேச்சானது அவையெல்லாம் அண்மித்து வந்துவிட்டது போலவும், சிங்களத் தலைவர்கள் அதனைத் தாமதிப்பது போலவும் கருத்துக் கொடுக்கிறது. இவ்வாறாக எதற்காக வார்த்தைகளால் விளையாட வேண்டும்?

இதற்கான முடிவெடுக்க ஏன் ஓரிரு மாதங்கள்? அடுத்தடுத்து இருபதுக்கும் அதிகமான தீர்மானங்களை எதற்காக மாநாட்டில் எடுக்க வேண்டும்? நான்கு வருடங்களில் செய்ய முடியாத வேலைகளை நான்கு மாதங்களில் இந்த அரசிடமிருந்து செய்விக்க முடியுமா?

அடுத்த மாதம் புதுடில்லிக்கான பயணம் எதற்கானது? அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் அடுத்த முடிவை தமிழரசுக் கட்சி எடுக்கப் போகிறதா? இவையெல்லாம் தேர்தலை மையப்படுத்திய தந்திரோபாயங்கள்.

இது போதாதென்று தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால தலைவராக மாறியுள்ள மாவை சேனாதிராஜா தமது பழகிப்போன கோசத்தை மீள ஆரம்பித்துள்ளார்.

'மீண்டும் போராட்டம் வெடிக்கும்" என்பது இவரின் அடையாளச் சின்னம். அதனையே தமிழரசு மாநாட்டிலும் முழக்கமாக்கியுள்ளார். ஓரிரு மாதங்களில் முடிவெடுப்போமெனறு சம்பந்தர் சொல்ல, மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் மாவையர். இதில் யாரை நம்புவது?

சிதறிக் கிடக்கும் வாக்கு வங்கியை மீண்டும் அணைத்துத் தூக்க தமிழரசுக் கட்சி தயாராகிவிட்டது. அன்று கேட்ட அதே பல்லவி மீண்டும் இப்போது கேட்க ஆரம்பிக்கிறது.

ஆனால், இன்றைய மக்கள் அன்றைய மக்கள்போல் தொடர்ந்து ஏமாறத் தயாராகவில்லை. முப்பதாண்டு கால விடுதலைப் போரில் மூழ்கித் திளைத்த அனுபவம் இவர்களுக்குண்டு.

No comments