முஸ்லீம்களிற்கு ஒரு நீதி?


முஸ்லீம் என்பதற்காக கண்டியில் ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது. 

இலங்கை விமானப்படைத் தளபதி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்திக்க சென்றவேளை, செய்தி அறிக்கையிடலுக்காக அங்கு சென்றிருந்த ஏரிக்கரை பிரதேச நிருபர் தனது கடமையை செய்யவிடாது தடுக்கப்பட்டுள்ளார். 

குறிப்பிட்டஅந்த நிகழ்வை அறிக்கையிடுவதற்காக, இலங்கைவிமானப்படையினால் ஊடக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளார்.அவர் தடுக்கப்படும்போது, தாம் தமது நிறுவனத்துக்காக உத்தியோகபூர்வ கடமையொன்றை நிறைவேற்றுவதற்காக வந்துள்ளதை தெரிவித்து, நிறுவனத்தினால் வழங்கங்கப்பட்டுள்ள அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார்.

ஆயினும் மகாநாயக தேரரின் பாதுகாப்பு பிரிவு இவரது இந்த நியாயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.அஸ்கிரியா மகாநாயக்க தேரருக்கான பாதுகாப்பு, அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் கண்டி காவல்துறை பிரிவு ஆகியவற்றின்  இணைக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.நியாயமான காரணங்கள் இன்றி குறித்த ஊடகவியலாளருக்கு மட்டும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதானது, அவர் மீது பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதற்கான அடையாளமாகவே  கருதப்படுகின்றது.

ஊடகவியலாளரின் இனமத அல்லது சமூக பின்னணியைப் பொருட்படுத்தாமல், தங்குதடையின்றி  அவர்களது பணிகளைச் சுதந்திரமாக செய்வதற்குத் அவசியமான சூழலை உருவாக்கி கொடுப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

No comments