கூட்டமைப்பின் விவாதம் - முட்டுக்கொடுத்த ஐதேக விட்டு ஓடியது

புதிய அரசியலமைப்பின் தேவையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்திருந்த சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை எம் பியுமான இரா சம்பந்தன் இந்த பிரேரணையை முன்வைத்து நேற்று பேசும்போதும் சபையில் எம் பிக்கள் இருக்கவில்லை. ஆளுங்கட்சியில் முக்கிய அமைச்சர்கள் கூட இருக்கவில்லை. அப்போது கோரம் மணியை ஒலிக்கவிட்டு சபை மீண்டும் கூட்டப்பட்டது.

இன்று இரண்டாவது நாள் விவாதம் நடந்தபோது ஆளும்கட்சியின் அமைச்சர் மங்கள சமரவீர மட்டும் முற்பகல் உரையாற்றியிருந்தார். வழமையாக இப்படியான விவாதத்திற்கு அரசின் சார்பில் பதிலுரை வழங்கப்படும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்றபடியால் பிரதமர் இதற்கு பதிலளித்து பேசுவாரென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றைய விவாத முடிவில் அப்படி எதுவும் நடக்கவில்லை.சபை ஒத்திவைக்கப்பட்டது.

அரசின் இந்த அசட்டை குறித்து கூட்டமைப்பின் எம் பியொருவர் கவலை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது கைகொடுத்த கூட்டமைப்புக்கு புதிய அரசியலமைப்பு குறித்து உரிய பதிலை வழங்க முடியாத அரசு குறித்து விசனப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments